தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின், புளொட்டின் கடைசித்தூண் சாய்ந்தது! நியாயங்களும் அநியாயங்களும் கலந்த போராளியின் வாழ்வு!!

நாற்பத்தைந்தாண்டுகால தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதன் பின்னான 15 ஆண்டுகளுமாக ஒரு மூன்று தலைமுறை இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்ட வரலாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்தினுடைய வரலாறு. இப்போராட்டத்தை ஆரம்பித்து வைத்த, பல்வேறு சூழ்நிலைகளில் இருந்தும் உயிர் தப்பியவர்கள் தற்போது தங்களுடைய இயற்கையான முடிவை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளனர். அவர்களின் உடல்போல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று சாட்சியங்களும் எம் கண் முன்னே சாம்பலாகின்றது அல்லது மண்ணோடு மண்ணாகிப் போகின்றது. இவ்வாறு தனது இயற்கையான முடிவை இன்று சந்தித்தவர் ஆர் ஆர் எனப் பரவலாக அறியப்பட்ட ஆர் ராகவன் என்ற வேலாயுதம் நல்லநாதர். இவர் புளொட் என அறியப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினர். இக்கட்சியின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவருமான இவர், இக்கட்சியின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு எல்லாமே ஆர் ஆர் தான். இவர் புளொட் அங்கம் வகிக்கும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமாவார். இவர் தன்னுடைய அறுபதுகளில் உயிரிழந்துள்ளார்.

1980களில் தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியாகி தங்கள் வாக்கு வங்கி இடதுசாரிகள் பக்கம் சாய்ந்துவிடாமல் தடுக்க முன்வைக்கப்பட்ட தமிழீழம் என்ற கோசம், அன்று தமிழ் இளைஞர்களை ஐஸ் போதை மாத்திரைக்கு இணையாக உசுப்பேற்றியது. அவ்வாறு தனது பதின்ம வயதில் உசுப்பேற்றப்பட்ட பல்லாயிரம் இளைஞர்களில் ஆர் ஆர் உம் ஒருவர். ஆம் இவருடைய சொந்த ஊரான சுழிபுரம் மண் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் கோட்டையாக இருந்தது. இந்த மண்ணின் வடக்கம்பரை பகுதியிலேயே 1976இல் தமிழீழக் கோரிக்கையை முன் வைக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்து. அதனால் ஆர் ஆர் இன் தலைமுறையினர் ஆயதங்களை நோக்கித் தள்ளப்பட்டனர்.

சுழிபுரத்தில் இருந்து சில மைல்களுக்கு அப்பால் பொன்னாலையில் யாழ் மேயராக இருந்த அல்பிரட் துரையப்பாவை தமிழ் தேசியம் தனது வாக்கு வங்கிக்கு இடைஞ்சல் எனக் கருதி போட்டுத்தள்ளியது. அதே சமயம் தெற்கில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நட்பு சக்தியாக விளங்கும் ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள பெரும் தேசியவாதத்தை பரல் கணக்கில் நெய்யூற்றி தென்பகுதி எங்கும் எரியவிட்டது. முறுக்கேறிய இளைஞர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தாக்குதல்களை மேற்கொண்டனர். அவர்கள் தாக்குதல்கள் எதிரியைக் குறி வைத்ததிலும் பார்க்க தங்களுக்குள்ளேயே குத்து வெட்டு போட்டுத் தள்ளியும் உள்ளனர். அவ்வாறு முதற் சகோதரப் படுகொலையாகக் கருதப்படும் சுந்தரம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்.

இதே சுழிபுரத்தில் பொதுவுடமைக் கருத்துக்களை வளர்த்தெடுத்தவர் கே ஏ சுப்பிரமணியம். எழுபதுகளின் பிற்பகுதிகளிலும் எண்பதுகளின் முற்பகுதியிலும் ஈழத்தமிழர் அரசியலில் சுழிபுரம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய வாதக் கருத்துக்களும் இடதுசாரித்துவச் சிந்தனையும் ஒன்றையொன்று முரண்டுபிடித்த இடங்களில் சுழிபுரம் குறிப்பிடத்தக்கது. அதில் கே ஏ சுப்பிரமணியத்தின் பங்கும் குறிப்பிடத்தக்கது. மீரான் மாஸ்ரர் என்று அறியப்பட்ட இவருடைய மகனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்த இரு முரண்பட்ட அரசியல் கருத்துநிலைகளால் உந்தப்பட்ட சிலர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வன்முறையற்ற வடிவமாகச் செயற்பட்ட காந்தியத்துடன் தங்களை இணைத்துக்கொண்டனர். இவர்களில் சுழிபுரத்தைச் சேர்ந்த சந்ததியார் மிகக் குறிப்பிடத்தக்கவர். அவரால் அரசியலுக்குள் ஈர்க்கப்பட்ட பலர் காந்தியத்துக்குள் உள்வாங்கப்பட்டனர். அவர்கள் பின்னர் புதிய தமிழ் புலிகள் பிளவுபட்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் உருவாக்கப்பட்ட போது கழகத்தின் உறுப்பினர்கள் ஆயினர். இவ்வாறு சுழிபுரத்தில் அவருடைய பதின்ம வயதில் அரசியல் நடவடிக்கைகளால் தேடப்பட்ட ஆர் ஆர் 1981களில் திருகோணமலையில் இயங்கிய காந்தியப் பண்ணையில் மறைந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

இலங்கை பாதுகாப்புப் படையினர் இஸ்ரேல் மோசாட் உளவுப் பிரிவின் ஆலோசணைப்படி தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தினர். 1981 இல் யாழ் பொதுநூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. யாழ் நகரம் தீக்கிரையாக்கப்பட்டது. குமுதினிப் படகுப் படுகொலை உட்படப் பல படுகொலைகள் இடம்பெற்றது. இளைஞர்கள் கண்மூடித்தனமாகக் கைது செய்யப்பட்டனர். யாழ் திருநல்வேலியில் 1983இல் இலங்கை இராணுவத்திற்கு எதிரான தாக்குதலும், அதனைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் நட்புசக்தியாக என்றும் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி தென்பகுதி எங்கும் தமிழ் மக்கள் மீதான இனவாதத் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டது. இவற்றின் எதிரொலியாக தமிழ் இளைஞர்கள் சாரை சாரையாக ஆயுத அமைப்புகளை நோக்கித் தள்ளப்பட்டனர்.

தனது பங்குக்கு இந்தியாவும் அமெரிக்க சார்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாடம் புகட்ட தமிழ் ஆயத அமைப்புகளுக்கு பயிற்சியும் ஆயதங்களும் வழங்கி அவர்களை வீங்கிப் பெருக்க வைத்தது. இயற்கையான முறையில் அரசியல் ரீதியாக படிப்படியாக வளராமல் ஆயதம் தாங்கிய அரசியலற்ற இயந்திரங்களாக ரோபோக்களாக போராளிகள் உருவாக்கப்பட்டனர். படுகொலைகளும் சகோதரப்படுகொலைகளும் சர்வசாதரணமானது. எல்லாப் போராளிகளும் தமிழ் மக்களது உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே தங்கள் உயிர்களை துச்சமென மதித்து ஆயதம் ஏந்தச் சென்றனர். அப்போது திருவடிநிலையில், மாதகலில் எந்த இயக்கத்தின் படகு அக்கரைக்குச் செல்ல காத்திருக்கின்றதோ அந்தப் படகில் ஏறினர். படகு தரையிறங்கும் போது தான் தெரியும் அவர்கள் எந்த இயக்கத்தில் சேர்கிறார்கள் என்பது. புளொட் படகில் ஏற வந்தவர் புலிகளின் படகில் ஏறி புலியான கதையும் மாறி நடந்த கதைகளும் ஏராளம்.

காந்தியப் பண்ணையில் திருகோணமலையைச் சேர்ந்த பார்த்தன் என்று அறியப்பட்ட ஜெயச்சந்திரனை நண்பராக்கிக் கொண்ட ஆர் ஆர் ஓரிரு ஆண்டுகள் திருகோணமலையிலேயே வாழ்ந்து 1983 இல் தமிழகத்துக்குச் சென்று ஆயதப்பயிற்சி எடுத்துள்ளார். தமிழ் இளைஞர்கள் ஆயத அமைப்புகைள நோக்கி ஓடிய போது அவ்வாறு ஓடியவர்களை கவர்ந்து இழுத்ததில் புளொட் வெற்றிகண்டது. வடக்கு கிழக்கின் கிராமங்கள் தோறும் புளொட் அமைப்பின் கட்டமைப்புகள் பெருமளவில் காணப்பட்டன. எண்ணிக்கையின் அடிப்படையில் புளொட் ஒரு பெரும் அமைப்பாக காணப்பட்டது. அதிலும் சுழிபுரம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கோட்டையாக இருந்து புளொட்டின் கோட்டையாக மாறியது. புளொட்டின் தலைவர் உமாமகேஸ்வரனின் விசுவாசிகள் பெரும்பாலும் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் 1984இல் உமாமகேஸ்வரன் பின்தளமான இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய போது சுழிபுரத்திலேயே தங்கி இருந்தார். அக்காலகட்டத்தில் தாயகத்துக்கு வந்த முதல் போராட்டக் குழுவின் தலைவர் உமாமகேஸ்வரன் தான்.

சுழிபுரம் புளொட்டின் வளர்ச்சிக்கும் அதன் தலைமைக்கும் எவ்வளவு முக்கியமாக இருந்ததோ அதே அளவுக்கு அதன் வீழ்ச்சிக்கும் முக்கிய காரணமாக இருந்தது. தங்கள் தலைவர் உமாமகேஸ்வரனை உளவுபார்க்க வந்துவிட்டார்கள் என்ற சந்தேகத்தில் நோட்டிஸ் ஒட்ட வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆறு பதின்மவயது இளைஞர்கள் கைது செய்யப்பட்டு மிகக் கோரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு அரையும் குறையுமாக புதைக்கப்பட்டனர். ஈழத்தமிர்கள் பல்வேறு படுகொலைகளைச் சந்தித்த போதும் இவ்வாறு மோசமானதொரு படுகொலையை அவர்கள் தங்கள் இனத்துக்குள்ளேயே மேற்கொண்டது இன்றும் மாறாத வடுவாக உள்ளது. அந்த ஆறு இளைஞர்களும் கூட சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களைப் படுகொலை செய்த கந்தன் என்ற கந்தசாமியின் தலைமையில் இப்படுகொலையைச் செய்தவர்களும் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்களே. ஏற்கனவே புளொட் அமைப்புக்குள் சந்ததியார் உட்பட உட்படுகொலைகள் தொடர்பான விடயங்கள் பூதாகரமாகி கழகம் பாரிய இருப்புச் சிக்கலை எதிர்நோக்கியிருந்த நிலையில் சுழிபுரம் படுகொலை மக்கள் மத்தியில் இருந்து கழகத்தை அந்நியப்பட வைத்தது.

தமிழீழ மக்கள் கழகத்தில் இருந்த அரசியல் தெளிவுடைய சக்திகள் படிப்படியாக தங்களை கழகத்திலிருந்து விடுவித்துக் கொண்டனர். பலர் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். அதனால் பெரும்பாலும் அரசியல் தெளிவற்ற ஆயதங்களை மட்டுமே நம்பியவர்களின் கையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தள்ளப்பட்டது. இதற்கு கழகத்திலிருந்து வெளியேறியவர்களுக்கும் கணிசமான பொறுப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. தொடர்ந்தும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைமை அரசியல் தெளிவற்ற ஆயதமேந்திய சுழிபுரம் ரோபோக்களிடமே இருந்தது. சுடு என்று நினைத்தாலேயே சுட்டுவிடுவார்கள்.

இதற்கிடையே தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏனைய இயக்கங்களை ஒவ்வொன்றாக அழித்து 1986இல் தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோவை முற்றாக அழித்த போது, தமிழீழம் என்ற கோரிக்கையே அர்த்தமற்றதாகியது. அன்றைய காலகட்டத்தில் இலங்கை இராணுவம் படுகொலை செய்த போராளிகளைக் காட்டிலும் தங்களுக்குள்ளேளே சகோதரப் படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் அதிகம். 1987 இல் இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்குள் நுழைய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் வவுனியாவில் தளம் அமைத்து தனித்து செயற்பட ஆரம்பித்தது. கடத்தல், கொள்ளை, கப்பம், கொலை என்பன தாசன் என்று அறியப்பட்ட மாணிக்கதாசனால் மேற்கொள்ளப்பட்டது.

இக்காலப் பகுதிகளில் ஆர் ஆர், உமாமகேஸ்வரனின் தலைமையை பாதுகாக்கும் அனைத்தையும் மேற்கொண்டு வந்தவர். 1988இல் உமமாகேஸ்வரனின் மாலைதீவைக் கைப்பற்றும் திட்டத்திற்கு புலனாய்வை மேற்கொண்டவர் ஆர் ஆர் எனத் தெரியவருகின்றது. மேலும் இத்தாகுதல் திட்டத்திற்கு சென்றவர்களில் ஆர் ஆர் மிக முக்கியமானவர். அதனால் ஆர் ஆர் க்கு ஏனையவர்களைக் காட்டிலும் கூடுதல் தண்டணை வழங்கப்பட்டது.

மாலை தீவில் 5 ஆண்டுகால சிறைவாசம் ஆர் ஆர் ரை மிகவும் மாற்றியமைத்தது. எம் கே சுப்பிரமணியத்தின் குடும்பத்தினரோடு நெருக்கமாக இருந்த ஆர் ஆர் க்கு அவர்கள் தொடர்ச்சியாக நூல்களை அனுப்பி வந்துள்ளனர். சிறையில் நிறையவே வாசித்த ஆர் ஆர் வாசிப்பால் பூரணமடைந்த ஒரு மனிதராக மாறினார். ஆனால் 1993 இல் ஆர் ஆர் மாலை தீவிலிருந்து நாடு திரும்பிய பொழுது அவருடைய கழகத்தினதும் நாட்டினதும் நிலை முற்றிலுமாக மாறியிருந்தது.

ஆர் ஆர் போன்று தமிழ் இளைஞர்கள் வரிசையில் நின்று தங்கள் கைகளை பிளேட்டினால் கீறி தமிழ் தேசியத் தலைவர்களுக்கு நெற்றித் திலகம் இட்ட காலங்கள் மறைந்தது. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் தமிழ் தேசியத் தலைவர்கள் தங்கள் வாக்கு வங்கி அரசியலுக்குத் திரும்ப, இவர்களை நம்பி ஆயதம் ஏந்திய, அரசியலில் அரிச்சுவடி மட்டும் படித்த அல்லது அதுவும் படியாத இளைஞர்கள் ஆயதங்களை அத்தலைவர்கள் பக்கம் திருப்பினர். தங்கள் கைகளைக் கீறி இரத்த திலகம் இட்டவர்கள், 1989 யூலை 13 அத்தலைவர்களையே இரத்த வெள்ளத்தில் வீழ்த்தியது வரலாறு. அதற்கு அடுத்த சில தினங்களிலேயே ஆர் ஆர் இன் நேசத்துக்குரிய தலைவர் உமாமகேஸ்வரன் ஆர் ஆர் இன் சுழிபுரம் நண்பர்களாலேயே திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஆர் ஆர் இன் இன்னும் சில நெருங்கிய நண்பர்கள் ஊரவர்கள் அதற்கு சில மாதங்கள் முன் முள்ளிக்குளத்தில் விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டனர்.

இந்தப் பின்னணியில் மாலைதீவுச் சிறையில் இருந்து திரும்பிய ஆர் ஆர் தொடர்ந்தும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கிய செயற்பாட்டாளரானார். 1999 செப்ரம்பர் 2இல் உள்வீட்டு சதியும் சேர்ந்து மாணிக்கதாசன் கொல்லப்பட்டார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மிக மோசமான படுகொலைகள் உட்பட பல கப்பம், கடத்தல், கொள்ளை எனப் பல்வேறு செயற்பாடுகளுக்குப் பின்னால் இருந்தவர் மாணிக்கதாசன். இவரது படுகொலைகள் பாலியல் வல்லுறவுகள் ஐரோப்பாவரை நீடித்திருந்தது. இதுவரை இவ்விடயங்கள் தொடர்பில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இவ்விடயங்கள் தொடர்பில் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரவில்லை.

இதுவிடயமாக ஆர் ஆர் உடன் பேசப்பட்டபோது, “நீங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு எதுவும் சொல்லலாம். எங்களுக்கு அரசியல் பாடம் எடுக்கிறீர்கள். இங்கு வந்து வாழ்ந்து பாருகங்கள். எங்கள் வாழ்வே ஒவ்வொரு நாளும் போராட்டமே” என்று பதிலளித்தார். தமிழ் மக்களிள் விடுதலைக்காக அன்று போராடச் சென்ற ஆர் ஆர் போன்ற குழந்தைப் போராளிகளின் வாழ்க்கையை எப்படி மதிப்பீடு செய்வது என்பது மிகக் கடினமானதும் சிக்கலானதுமாகும். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் சட்டவிரோதமாகச் சேர்க்கப்பட்ட ஏராளமான கோடிக்கணக்கான சொத்துக்கள் இன்னமும் அதன் தலைவர் சித்தார்த்தனின் குடும்பத்திடமும் மாணிக்கதாசனின் உறவினர்களிடமும் இருப்பதாக பரவலாக குற்றம்சாட்டப்படுகின்றது. ஆர் ஆர் இடம் இருந்த சொத்துக்களும் அவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போதே கைமாற்றப்பட்டுவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆர் ஆர் தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு நல்ல மனிதராகவே பலராலும் கணிக்கப்படுகின்றார். தன்னுடைய பதின்ம வயதில் தன்னுயிரை துச்சமென மதித்து தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடச் சென்றவர்களை, அவர்களது போராட்டப் பயணத்தின் பின்னணியில் மதிப்பீடு செய்வதென்பது மிகக் கடினமானது. மாலைதீவில் இருந்து நிறைந்த வாசிப்போடு தாயகம் திரும்பிய ஆர் ஆர் இலங்கையில் ஐந்து ஆண்டுகள் சட்டக் கல்வியைக் கற்றுள்ளார். பலருக்கு தனிப்பட்ட முறையில் உதவிகளையும் செய்துள்ளார். உலகம் பூராகவும் உள்ள அவருடைய தோழர்கள் அவருக்கு தங்கள் அஞ்சலியைச் செலுத்துகின்றனர். நிறைந்த அநியாயங்களும், நியாயங்களும் கொண்ட போராட்டப் பயணத்தில் அநியாயத்திற்கும் நியாயத்திற்குமான இடைவெளி எமது போராட்டத்தில் மிகக் குறுகியதாக்கப்பட்டுவிட்டது. கரணம் தப்பினால் மரணம் என்ற சூழலே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போராளிகளிடையே காணப்பட்டது. ஆதலால் ஆர் ஆர் இன் போராட்ட வாழ்வும் அதன் நியாயத்தன்மையும் எப்போதும் விவாதத்துக்குரியதாகவே இருக்கும்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைப் பொறுத்தவரை அந்த அமைப்பின் கடைசித்தூண் ஆர் ஆர் என்றால் மிகையல்ல. இப்போதைய தலைவர் சித்தார்த்தன் கூட கழகத்தின் உறுப்பினராக உமாவின் மறைவுக்குப் பின் தன்னை இணைத்துக்கொண்டவர். அவருக்கு கழகத்தையும் தெரியாது. போராட்டமும் தெரியாது. கழகத்தின் இருப்புக்கான தேவை இல்லாமல் போய் நீண்டகாலம் ஆகிவிட்டது. கழகம் காலாவதியாகி விட்டது. இனிக் கழகம் மெல்லக் கலையும். அதுவே அரசியல் யதார்த்தமாகும்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *