பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியுதவி திட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியம் “ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் 2024/2025” திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

 

இதன்படி, மொத்தமாக இலங்கையில் உள்ள 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில், தரம் 01 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் ஒரு இலட்சம் (100,000) மாணவர்களுக்கு, வருடாந்தம் இந்த நிதியுதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், இந்த முழுமையான திட்டத்திற்கும் 3600 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியம் ஒதுக்கியுள்ளது.

 

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் பாடசாலை உபகரணங்கள், பயிற்சி புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளல் போன்ற விடயங்களில் நிலவும் சிரமங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

 

ஒவ்வொரு பாடசாலையிலும் மிகக்குறைந்த வசதிகளின் கீழ் கல்வி கற்கும் திறமையான மாணவர்களைத் தெரிவு செய்து, அந்தப் பிள்ளைகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் இந்நாட்டு மாணவர்களுக்கு தொடர்ச்சியான பாடசாலைக் கல்வியை வழங்கி, அதன் ஊடாக நாட்டின் மனித வளத்தை மேம்படுத்த முதலீடு செய்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும்.

 

இதன்படி, இந்தப் புலமைப்பரிசில் பெறுவோரைத் தெரிவு செய்யும் செயல்முறை மற்றும் அது தொடர்பான அனைத்து தகவல்களும் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கமான www.facebook.com/president.fund மூலம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *