முல்லைத் தீவில் பாதுகாப்பு வலயப் பகுதியில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரச அதிபர் பா.பார்த்தீபன் தெரிவித்துள்ளதுடன் நாளை கப்பல் மூலம் அனுப்பப்படவுள்ள உணவு மூலம் நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார். முல்லைத்தீவு அரச கட்டுப்பாடற்ற பாதுகாப்பு வலயத்தினுள் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதனால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
இங்கு சீனி ஒரு கிலோ 2,500 ரூபாவாகவும் தேங்காய் ரூபா 1,400 க்கும் விற்கப்படுகின்றது. இதேவேளை ஒரு கிலோ செத்தல் மிளகாய் 12,000 ரூபாவாக விற்கப்படுகின்றது.
குறிப்பாக அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி ஒரு கிலோ 400 ரூபாவுக்கு விற்கப்படும் அதேநேரம் குழந்தைகளுக்கான பால்மா 2,200 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. நாளை செவ்வாய்க்கிழமை இங்கு உணவு அனுப்புவதற்காக திருகோணமலையில் கப்பலில் உணவு ஏற்றப்படுகின்றது. இம்முறை 1,000 முதல் 1,100 மெற்றிக் தொன் உணவுப் பொருள் அனுப்பப்படுமென தெரியவருகின்றது.
இதன் மூலம் இங்குள்ள உணவுத் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளிக்கலாம். மண்ணெண்ணை இங்கு இல்லை. இங்குள்ள மக்கள் மலசலகூடம், நீர் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, வெள்ளிக்கிழமை கிறீன் ஓசன் கப்பல் மூலம் 466 பேர் மேலதிக சிகிச்சைக்காக புல்மோட்டைக்கு அழைத்துவரப்பட்ட நிலையில் சனிக்கிழமையும் சுமார் 500 பேர் மேலதிக சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்