இலங்கையின் வடக்கில் ஏற்பட்டுவரும் உக்கிர மோதல்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள பிரித்தானிய அரசு, அங்கே சிவிலியன்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த உடனடி யுத்தநிறுத்தமொன்று ஏற்படவேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது.
இலங்கையில் போர் நிறுத்தம் வர வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு சேர்ந்து அமெரிக்கா பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளும் கோரிவருகின்றன என்றும் ஐ.நா.மன்றமும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சரால் சனிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தப் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள மக்களை விடுவிக்கும் நோக்கில் இலங்கை அரசுடனும் விடுதலைப் புலிகளுடனும் உடன்பாடொன்றை எட்டும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தற்போது ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிடும் அந்த அறிக்கை, இது தொடர்பில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா. தலைமை செயலரின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார், தனது பயணம் குறித்த அறிக்கை ஒன்றை ஐ.நா.மன்றப் பாதுகாப்பு சபையில் விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
இலங்கை குறித்து விவாதிக்க டேஸ் பிரவுண் அமெரிக்கா செல்கிறார்
இலங்கை தொடர்பில் ஐ.நா.மன்றத்தில் விவாதிக்க பிரிட்டிஷ் பிரதமரின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி டேஸ் பிரவுண் நியூயார்க் செல்வதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இலங்கையில் சமாதானம் ஏற்பட தன்னாலான சகல முயற்சிகளையும் பிரிட்டன் மேற்கொள்ளும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.