மன்னார் மாவட்டத்தில் கடந்த 09 மாதங்களுக்கு மேலாக கையடக்கத் தொலைபேசி மற்றும் இலங்கை ரெலிகொம் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சி.டி.எம்.ஏ. தொலைபேசி போன்றவற்றின் செயற்பாடுகள் திடீரென இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. இந்தச் செயற்பாட்டினால் மன்னார் மாவட்ட பாவனையாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்த மொபிட்டெல் கையடக்கத் தொலைபேசிச் சேவையின் இணைப்புக்கள் திடீரென வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் வழங்கப்பட்டிருந்தது.
இதன் போது பாவனையாளர்கள் தொலைபேசிச் சேவையை பெற்றுக் கொண்டனர். மொபிட்டெல் இணைப்பின் மீள் நிரப்பும் அட்டைகள் பல ஆயிரக்கணக்கான ரூபாவுக்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் சனிக்கிழமை காலை 8 மணியளவில் தொலைபேசி இணைப்புகள் நிறுத்தப்பட்டது. இந்தச் செயற்பாட்டினால் மன்னார் மாவட்ட பாவனையாளர்கள் பெரிதும் ஏமாற்றத்திற்குட் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.