இலங்கையைச் சேர்ந்த 5400 பேருக்கு இவ்வருட இறுதிக்குள் கொரியாவில் வேலை வாய்ப்பினை வழங்க அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் எஸ். போபிட்டிய தெரிவித்தார்.
வேலையாட்கள் கோரி, கொரிய அரசாங்கத்தினால் 15 நாடுகளுக்கு வெளியிடப்பட்ட ‘கோட்டா’ முறையின் கீழ் இலங்கை இம்முறை மூன்றாம் இடத்தைத் தட்டிப்பிடித்துள்ளது. இது நாட்டுக்குக் கிடைத்த பெரும் கீர்த்தியும், வெற்றியுமாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலன்புரி அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் மூன்றாம் திகதி முதல் டிசம்பர் 31ம் திகதிக்குட்பட்ட காலப் பகுதிக்குள் 15 நாடுகளிலிருந்து 59 ஆயிரம் பேருக்கு தொழில்வாய்ப்பினை வழங்க கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வேலையாட்கள் கோரி, கொரிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் ‘கோட்டா’ வில் மூன்றாம் இடத்தை எய்தியிருக்கும் இலங்கையிலிருந்து 5 ஆயிரத்து 400 பேருக்கு இவ்வருட இறுதிக்குள் கொரியாவில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன.
முதலாம் இடத்தில் வியட்நாமும் இரண்டாம் இடத்தில் பிலிப்பைன்சும் இருப்பதாகவும் அமைச்சின் பேச்சாளர் மேலும் கூறினார். கொரியாவுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலன்புரியமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அந்நாட்டின் வேலைவாய்ப்பு அமைச்சர் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தார்.
இலங்கையிலிருந்து கொரியா வரும் தொழிலாளிகள் பெற்றிருக்கும் விசேட பயிற்சி முறைகள் மற்றும் அவர்களுடைய திறமைகள் காரணமாக அந்நாட்டில் அவர்களுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டிருப்பதாக இச்சந்திப்பின் போது கொரிய அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையிலேயே கடந்த வருடம் இருந்த ஸ்தானத்திலிருந்து முன்னேறி இலங்கை இம்முறை மூன்றாம் இடத்தை அடைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். கொரியா செல்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் ஏற்கனவே 7 ஆயிரம் பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கூடுமானவரையில் இவர்களனைவரையும் இவ்வருட இறுதிக்குள் கொரியா அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் எனவும் அமைச்சர் கெஹெலிய நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தற்போது கொரியாவில் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சின் பேச்சாளர் கூறினார். இதேவேளை கொரியா செல்ல விருப்போருக்கு மேலும் விசேட பயிற்சி முறைகளை வழங்குவது குறித்து அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.