நாட்டில் ஏற்படுத்தப்படவிருக்கும் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்றவாறு பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத் துறைக்குள் பெண் தொழில்முனைவோர் பெரும் பங்கை ஆற்ற முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெண் வர்த்தகர்கள் சமூகத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அனைத்து விதமான ஆதரவையும் வழங்கும் எனவும் தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ‘சிறந்த பெண் தொழில்முனைவோருக்கான விருது விழா 2023’ இலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இலங்கை பெண்கள் தொழில்துறை மற்றும் வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது விழாவில் சிறந்த பெண் வர்த்தகர்கள் கௌரவிக்கப்பட்டனர். அவர்களின் வியாபாரம், சந்தை பிரவேசத்தை வலுவூட்டும் நோக்கில் இந்த விருது வழங்கப்பட்டதோடு, சார்க் வலயத்தை சேர்ந்த பெண்களுக்கு விசேட பிரிவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பத்து சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருதுகளை வழங்கப்பட்டது. சார்க் பிரிவு வெற்றியாளர்களுக்கான விருதுகள் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவால் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கையின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல், முக்கிய வர்த்தக நடவடிக்கைகளில் பெண்களை இணைத்துக்கொள்ளல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக 1985 ஆம் ஆண்டு தேசிய பெண் வர்த்தக சம்மேளனம் (WCIC) ஸ்தாபிக்கப்பட்டது.
தொழில் வல்லுனர்கள் மற்றும் தமது சொந்த வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தும் பெண்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை பெண்கள் தொழில்துறை மற்றும் தேசிய பெண் வர்த்தக சம்மேளனம் 300 அங்கத்தவர்களை கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“கடந்த சில வருடங்கள் சுமூகமானதாக இருக்கவில்லை. வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நெருக்கடியான காலகட்டமாக அமைந்திருந்தது. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தொழிலை முன்னெடுத்துச் செல்ல நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது.
2024ஆம் ஆண்டில் ஓரளவு பொருளாதார வளர்ச்சி ஏற்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் கடைசி இரண்டு காலாண்டுகளில் சாதகமான பொருளாதார வளர்ச்சியை எம்மால் அடைய முடிந்தது. ஆனால் 2018 ஆம் ஆண்டில் இருந்த பொருளாதார வளர்ச்சியை இன்னும் எட்ட முடியாதுள்ளது. அதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் தேவைப்படும்.
கடந்து வந்த பொருளாதார நெருக்கடியின் பின்னர் நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் முதல் வருடம் இதுவாகும். அதற்காக பல கடினமாக தீர்மானங்களையும் எடுக்க வேண்டியிருந்தது.
அனைவரும் வாழக்கூடிய பொருளாதார சூழலை உருவாக்க வேண்டும். தற்போது பணத்தை அச்சிடவோ, கடன் வாங்கவோ முடியாது. அதனால், வரி சேகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ரூபாயை பலப்படுத்தி, பணவீக்கத்தைக் குறைப்பதே எமது இலக்காகும்.
பழைய பொருளாதார அடிப்படையில் நாட்டை முன்னேற்ற முடியாது. அதனால், நாட்டில் விரைவான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு புதிய பொருளாதார முறையில் நாடு கட்டியெழுப்ப வேண்டும். அதற்காக போட்டித்தன்மை நிறைந்த ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். மேலும், அரசாங்கம் என்ற வகையில் வர்த்தகர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கும். அதற்காகவே ‘பாராட்டே’ சட்டத் திருத்தச் செயற்பாடுகளும் இவ்வருட இறுதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பெண் வர்த்தகர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பைச் செய்கிறார்கள். இவர்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் அரசாங்கம் வழங்கும்.
மேலும், பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக உங்கள் சங்கத்தினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. பெண்களை வலுவூட்டுவதால் நாட்டின் பொருளாதாரத்தை கணிசமான அளவில் பலப்படுத்த முடியும். மேலும், பெண்களை தொழில்முனைவோராக மாற்றுவதற்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பெண்களால் பெரும் பங்காற்ற முடியும். எனவே நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கு பெண்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. எதிர்காலத்தில் டிஜிட்டல்,பசுமைப் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு பெண் தொழில் முனைவோரை தயார்படுத்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது.
இன்று, பல பெண்கள் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், நாட்டின் சுற்றுலாத் துறையும் கணிசமாக முன்னேற்றம் கண்டுள்ளது. அதற்கான அதிக வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வலுவான தொழில்முனைவோரை உருவாக்க முடியும். சுற்றுலாத் துறையை சரியான முறையில் மேம்படுத்த வேண்டும். அதற்கான சேவைகளை வழங்கும் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. சுற்றுலா வணிகத்தில் ஒருவரின் நாளாந்த வருமானம் குறைந்தபட்சம் 500 டொலர் வரையில் அதிகரிக்க வேண்டும். அந்த பொறுப்பு பெண் வர்த்தகர்கள் சங்கத்தையும் சார்ந்துள்ளது.
விவசாயத் துறையை நவீனமயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில் இத்துறைசார் தொழில் முனைவோருக்கு அதிக கேள்வி இருக்கும். உலகம் தொழில்நுட்பத்துடன் முன்னேறும்போது, நாமும் அதற்கமையவே முன்னேற வேண்டும்.
நாம் ஒரே இடத்தில் நிற்க முடியாது. புதிய தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை நாங்கள் ஏற்கனவே அமைத்துள்ளோம். அந்தச் செயற்பாட்டை தொடர்ச்சியாக முன்னெடுத்தால் இலங்கையின் பொருளாதாரத்தை உயர் மட்டத்திற்கு கொண்டுச் செய்ய முடியும்.
தற்போது மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் காணி உரிமை பெற்றுகொள்ளும் 20 இலட்சம் பேரின் பங்களிப்பு நேரடியாக பொருளாதாரத்திற்கு கிடைக்கும். அதன்படி, விவசாய நவீனமயமாக்கல் முயற்சிகளுக்கும் அவர்களின் நேரடி பங்களிப்பைப் பெற முடியும். வலுவான பொருளாதாரத்தை கொண்ட இலங்கையை உருவாக்கும் நோக்கிலேயே இந்த அனைத்து வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, மின் சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் .பஹீம் உல் அஸீஸ், இலங்கை பெண்கள் தொழில்துறை மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் அனோஜீ டி சில்வா, இணைச் செயலாளர் துஷிதா குமாரகுலசிங்கம், மற்றும் சித்ராஞ்சலி திசாநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.