காலி மாவட்டம் அக்மீமன பகுதியில் கடந்த வாரம் முதல் காணாமற் போயிருந்த சிறுவனும் சிறுமியும் சடலங்களாக மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். தனுஜா ஐராங்கனி (10) எனும் சிறுமியும் கவின் ரஸ்மிக்க (03) எனும் சிறுவனுமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாகத் தெரிவிக்கபடுவதாவது:- அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொனாமுள்ள நுகேகந்த கிராமத்தைச் சேர்ந்த மேற்படி சிறுவனும் சிறுமியும் கடந்தவாரம் முதல் காணாமற் போயுள்ளார்கள். ஒன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் போதே இவ்விருவரும் காணாமற் போயுள்ளனர். சிறுவனும் சிறுமியும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
இரு குடும்பத்தாரும் தமது பிள்ளைகள் காணாமற் போனது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன் ஊர்மக்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு பிள்ளைகளைத் தேடியும் வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (18) நண்பகல் வேளையில் பாடசாலை மாணவியான தனுஜா ஐராங்கனி (10) எனும் சிறுமி தனது வீட்டு வளவுக்குள்ளிருந்த பழைய மலசல கூடமொன்றிலிருந்து அக்மீமன பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தாரும் ஊர் மக்களும் பொலிஸாரின் உதவியுடன் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் துர்திஷ்டமாக கவின் ரஸ்மிக்க (03) எனும் சிறுவனும் நேற்று (19) காலை சடலமாகவே கண்டெடுக்கப்பட்டார். துகேகந்த கிராமத்தில் ஜயந்தி எனும் சந்தியிலிருந்த காட்டுக்குள்ளிருந்த வீடொன்றின் அருகிலிருந்தே சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இம்மர்ம கொலைகள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர். பெரியவர்களிடையே ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு சிறுவர்கள் பலிக்கடாவாக்கப் பட்டிருப்பதாகவும் பொலிஸார் கூறினர். இரண்டு குடும்பங்களுடனும் கோபமுள்ள ஒருவராலேயெ இப்பிள்ளைகள் கடத்தப்பட்டிருக்க வேண்டுமெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.கொல்லப்பட்டுள்ள சிறுவனதும் சிறுமியினதும் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.
இதுவரையில் இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்