நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு சபாநாயகர் அனுமதிப் பத்திரம் வழங்கியதை எதிர்த்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நீதியரசர்கள் பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் எழுப்பிய பூர்வாங்க ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு மனுவைத் தொடர்வதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது.
பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றளித்ததைத் தொடர்ந்து சட்டமியற்றும் விவகாரங்களில் தலையிட உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என சட்டமா அதிபர் ஆட்சேபனைகளை எழுப்பினார்.
ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்திற்கு சபாநாயகரின் சான்றிதழ் சட்டத்தில் செல்லாது என அறிவிக்குமாறு சுமந்திரன் தனது மனுவில் கோரியுள்ளார்.
பாராளுமன்றக் குழுவின் ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத் திருத்தங்கள் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு இணங்கவில்லையென சபாநாயகர் மற்றும் பாராளுமன்றத்திற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கத் தவறியுள்ளதால் , மனுதாரர் மற்றும் குடிமக்களுக்கு அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14 வது உறுப்புரைகளில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள், சட்டமா அதிபரால் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.