புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளைச் சித்தரிக்கும் மற்றுமொரு புகைப்படக் கண்காட்சி நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜெனீவாவிலுள்ள சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் நடைபெறவுள்ள இப்புகைப்படக் கண்காட்சியின்போது கடந்த மூன்று தசாப்தங்களில் எல்.ரீ.ரீ.ஈ. யினர் மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் என்பவற்றைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் அலுவலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு என்பவற்றுடன் இணைந்து ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சி எதிர்வரும் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடமிருந்தும் சர்வதேச செய்தி முகவர் நிலையங்கள், வெளியீட்டு நிறுவனங்கள் என்பவற்றிடமிருந்தும் பெறப்பட்ட புகைப்படங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. புலிகளின் கொடுமைகளை சித்தரிக்கும் இவ்வாறான புகைப்படக் கண்காட்சிகள் கடந்த வருட இறுதிப் பகுதியில் பிரித்தானியா, நெதர்லாந்து, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.