இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக தன்னால் முடிந்தது அனைத்தையும் முதல்வர் கருணாநிதி செய்து விட்டார். இனி செய்வதற்கு எதுவுமில்லை என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:
தி.மு.க. அரசின் மீது எந்தக் குறையையும் சொல்ல முடியாது. அதனால்தான் ஈழப் பிரச்னையை எதிரணியினர் தேர்தல் பிரச்னை ஆக்குகின்றனர். ஈழத் தமிழர்களுக்காக 2 முறை ஆட்சியைப் பறி கொடுத்தவர் கருணாநிதி. அவரும், அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தனர். இந்தியாவிலுள்ள தலைவர்களையெல்லாம் அழைத்து மதுரையில் டெசோ மாநாடு நடத்தினார். இப்போது கூட அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டப் பேரவையில் தீர்மானம், மனிதச் சங்கிலிப் போராட்டம், பிரதமருடன் சந்திப்பு என இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் கருணாநிதி செய்து விட்டார். இனி செய்வதற்கு ஒன்றுமில்லை.
திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் இணைந்த எங்கள் கூட்டணி இயற்கை கூட்டணி. கூட்டணிக் கட்சிகளில் உள்ள தலைவர்களை மதிக்கத் தெரிந்தவர் கருணாநிதி. உண்மையான தலைவர்கள் இல்லாத கட்சிகளும், விபத்தில், வன்முறையில், சாதி உணர்வுகளைத் தூண்டி தலைவர் ஆனவர்களும் உள்ள கூட்டணி, சந்தர்ப்பவாதக் கூட்டணி. நான் தவறானக் கூட்டணியில் உள்ளதாக ராமதாஸ் கூறுகிறார். ஆனால் அவர் உள்ள கூட்டணிதான் தமிழர்களுக்கு எதிரான கூட்டணி.