இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னையில் பெண்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஐந்து பெண்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இலங்கையில் படுகொலை செய்யப்படும் அப்பாவி தமிழர்களை காக்க கோரியும், அங்கு போர் நிறுத்தம் செய்வதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகளுடன் பெண்கள் போராடி வருகின்றனர். பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த 13-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை வந்தனர்.
சென்னை கொளத்தூரில் முத்துக்குமார் உடல் வைக்கபப்ட்டிருந்த இடத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். ஆனால் போலீஸார் அனுமதி மறுக்கவே, மதிமுக தலைமைக் கழகமான தாயகத்தில் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 7வது நாளாக போராட்டம் நீடித்தது. அப்போது பல பெண்கள் சோர்வடைந்து மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
சில நாட்களுக்கு முன்பு கவிதா (30), சித்ரா (40), சசிகலா (30) ஆகியோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர்களைக் கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதுரை பழனியம்மாள், காஞ்சீபுரம் சசிகலா, ஜெயமணி, மேகனா, செல்வி ஆகியோரின் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
இவர்களில் ஜெயமணி மயக்கமடைந்து விழவே, அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த நிலையில் இன்று 8வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நீடித்து வருகிறது.