பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தி்னுள் வந்துள்ள சுமார் 5000 பேரைத் தங்க வைப்பதற்காக நான்கு பாடசாலைகளில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஏற்பாடுகள் குறி்த்து இன்று மாலை வவுனியா செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற அவசர உயர்மட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயம், தாண்டிக்குளம் பிரமண்டு வி்த்தியாலயம், ஆண்டியாபுளியங்குளம் பாடசாலை, முதலியாகுளம் பாடசாலை ஆகியவற்றில் ஓமந்தை பகுதிக்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ள 5000 பேரையும் தங்க வைப்பது என இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பாடசாலைகளில் இடம்பெயர்ந்தவர்களுக்கான கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஐ.சி.ஆர்.சி மற்றும் யுனிசெவ் ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் இன்று காலை வவுனியாவுக்கு இராணுவத்தி்னரால் கொண்டுவரப்பட்ட 1500 பேர் மனிக்பாம் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.