உலகப் புகழ்பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் ஜெ.ஜி. பலார்ட் தனது 78 ஆவது வயதில் மரணமானார். “கிராஷ்’ மற்றும் “த எம்பயர் ஒப்த சன்’ ஆகிய நாவல்கள் மூலம் உலகப் புகழ்பெற்ற பலார்ட், பல வருட காலமாக நோயுற்ற நிலையில் மரணமடைந்துள்ளார்.
பிரித்தானியாவில் மான்செஸ்டரிலுள்ள கலிகோ பிரின்டர்ஸ் நிறுவனத்தில் இரசாயனவியலாளராக கடமையாற்றிய பலார்ட்டின் தந்தை மேற்படி நிறுவனத்தின் சீனாவிலுள்ள துணை நிறுவனமான சீன பிரின்டிங் அன்ட் பினிஷிங் கம்பனியின் தலைவராகவும் முகாமைப் பணிப்பாளராகவும் பதவியுயர்வு பெற்று சீனாவுக்கு குடும்பத்துடன் சென்றபோது அங்கு பலார்ட் பிறந்தார்.
சீனாவின் சங்காய் நகரில் பிறந்து வளர்ந்த பலார்ட் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் (தனது 12 ஆவது வயதில்) சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. இதன்போது அவர் ஜப்பானிய சிறைச்சாலையில் 3 வருடங்களைக் கழித்தார்.
சீனாவிலுள்ள ஜப்பானிய சிறைச்சாலையில் கழித்த தனது இளமைப் பருவத்தை அடிப்படையாக வைத்தே “த எம்பயர் ஒப் த சன்’ நாவலை அவர் எழுதினார். பின்னர் பிரித்தானியா திரும்பிய பலார்ட், 1960ஆம் ஆண்டு முதல் முழு நேர எழுத்தாளராக மாறினார்.
அவரது “த எம்பயர் ஒப் த சன்’ நாவலானது திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வெளியானது. அத்திரைப்படத்தை பிரபல ஹொலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பையல்பேர்க் இயக்கியிருந்தார். அதே சமயம் கார் விபத்துகளின் போதான பாலியல் நாட்டங்கள் தொடர்பில் அவர் எழுதிய “கிராஷ்’ நாவலானது டேவிட் குரொனென்பேர்க் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்தது. பலார்ட் தனது வாழ்நாளில் 15 நாவல்களையும் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.