ஒடுக்கப்பட்டவர்களுக்கான கல்வி: ஒடுக்குமுறையை உடைத்து முளைத்த வீரியமான மானிடன் அதிபர் பெருமாள் கணேசன்!

கடந்த ஏழு தசாப்தங்களாக திறந்த வெளிச் சிறைச்சாலையாக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் குறிப்பாக காசாவில் வாழ்ந்த பாலஸ்தீனியர்கள் இன்று மிகமோசமான மனிதக் கொடூரத்தின் சாட்சியங்களாக மாறியுள்ளனர். ஹிட்லரின் இனப்படுகொலைக்கு பலியாகி துரத்திவிடப்பட்ட யூதர்களுக்கும் உலகெங்கும் பரந்து வாழ்ந்த யூதர்களுக்கும் வாக்களிக்கப்பட்டதாக சொல்லப்படும் பாலஸ்தீனத்தில்; அடைக்கலம் கொடுக்கப்பட்டது. இன்று அடைக்கலம் புகுந்தவர்கள் அங்குள்ள அந்த மண்ணை விட்டு நீங்காத பாலஸ்தீனியர்கள் மீது இனப்படுகொலையைப் புரிகின்றது இஸ்ரேலிய இராணுவம். காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை ஒழித்துக்கட்டுவதற்கு அதிநவீன ஆயதங்களை மட்டும் இஸ்ரேலிய கொடுங்கோல் அரசு பயன்படுத்தவில்லை, அவர்களுக்கு கிடைக்கும் தண்ணியை நிறுத்தினர். உணவை நிறுத்தினர். பாண் ரொட்டி தயாரிக்கும் வெதுப்பகங்களை குறி வைத்துத் தாக்கினர். வாழ்விடங்களை தரைமட்டமாக்கினர், வீதிகளைக் கிளறி நாசம் செய்தனர். கழிவுகளை பரவவிட்டு தொற்றுநோய்கள் பரவச் செய்தனர். யாரும் மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவிடாதபடி மருத்துவமனைகளை அழித்தனர். காலனித்துவ காலத்தில் ஐரோப்பிய வெள்ளையின மேலாதிக்கவாதிகள் உலகெங்கும் சென்று இன அழிப்புச் செய்து அந்த நாடுகளைச் சுரண்டிக் கொள்ளையடித்து தங்கள் செல்வத்தை வளர்த்தனர். அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் என்றழைக்கப்பட்ட பூர்வகுடிகள் அழித்தொழிக்கப்பட்டனர். அவுஸ்திரேலியாவில் பூர்வகுடிகள் அழிக்கப்பட்டனர். கதை முடியவில்லை தொடர்கிறது. காஸாவில் பாலஸ்தீனியர்களை அழிக்கின்றனர். பாலஸ்தீன நிலத்தை அபகரிக்கின்றனர். இதற்கும் மணிவிழாக் கொண்டாடும் நாயகன் பெருமாள் கணேசனுக்கும் என்ன சம்பந்தம்? இதற்கும் கல்விக்கும் என்ன சம்பந்தம்?

காலனியாதிக்கவாதிகளின் கொள்ளைக்கும் அதிகாரத்திமிருக்கும் பலியான பல நூறு ஆயிரம் சமூகங்களில் ஒன்றான மலையக சமூகத்திலிருந்த வீரியமுடைய விதையில் முளைத்த மானிடன் தான் பெருமாள் கணேசன். இப்போது மலையகத்தின் 200 ஆண்டுகள்ளை எண்ணிப் பார்க்கின்றோம். ஐரோப்பிய காலனித்துவ வாதிகள் 200 ஆண்டுகளுக்கு முன் என்ன செய்தார்கள் என்பதைக் காட்டுவது தான் காஸா மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர். காலனித்துவ காலத்தில் தமிழகத்தில் கொடிய பட்டினியால் மக்கள் இலட்சக் கணக்கில் இறந்தபோது, தானியங்களை இந்தியாவில் இருந்து பிரித்தானியாவுக்கு ஏற்றியவர்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள். பஞ்சத்தை பயன்படுத்தி அம்மக்களை தேயிலை, ரப்பர் தோட்டங்களில் பணியாற்ற இலங்கைக்கு கொண்டு வந்தனர். அந்த மலையக மக்கள் அன்றுபட்ட அவலம் காஸாவில் இன்று அதே ஏகாதிபத்தியம் செய்கின்ற கொடுமைகளுக்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல. அன்றும் சரி, இன்றும் சரி அவர்கள் ஏனைய மக்களை மனிதர்களாகவே கணிக்கவில்லை. மனித விலங்குகளாகவே கணிக்கின்றனர். அவ்வாறே இஸ்ரேலிய தலைவர்கள் மனித விலங்குகள் என்று கூறுகின்றனர்.

இந்த மலையக மக்கள் அவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியில் இலங்கைக்கு பொய்வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டனர். இன்று இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்த போதும் இலங்கை மக்கள், தமிழ் மக்களும் கூட அவர்களை கண்ணியமாக அன்றும் நடத்தவில்லை. இன்றும் நடத்தவில்லை. நாளை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இன்னமும் ஏற்படவில்லை. மலையகத் தமிழர்களை இந்திய ஏகாதிபத்தியத்தின் நீட்சியாக ஜேவிபி உட்பட பேரினவாதக் கட்சிகள் பார்த்தன. அம்மக்களை தங்கள் எதிரிகளாக பார்த்து இன்றும் தோட்ட அடிமைகளாக நடத்துகின்றனர். தமிழ் மக்களும் அந்த மக்களை கள்ளத் தோணிகள், வடக்கத்தையான் என்றெல்லாம் முத்திரைகுத்தி தங்கள் அடிமைகளாகவே தொடர்ந்தும் வைத்திருந்தனர். பின்நாட்களில் படித்த வாலிபர் திட்டத்தின் கீழ் யாழ் மேட்டுக்குடிகள், கிளிநொச்சியில் பெற்றுக்கொண்ட காணிகளுக்கு தோட்டங்களுக்கு படிக்க வாய்ப்பளிக்கப்படாத மலையக மக்கள் தோட்டக்காரர்களாகினர்.

இவர்களில் சில லட்சம் பேர் தமிழகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட போதும் அங்கும் அவர்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாகவே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். வறுமை தலைவிரித்தாடும் உத்தரப் பிரதேசத்தில் ஆயிரம் கோடி இந்திய ரூபாயில் ராமர் கோயில்கட்டி மக்களுக்கு ‘நாமம் போடும்’ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு பாடசாலைகளையோ தொழிலகங்களையோ அமைக்கத் தயாரில்லை. ராமர் கோயிலைக்கட்டி மக்களை முட்டாள்களாக வைத்திருந்தால் மட்டுமே தாங்கள் தலைவர்களாக இருக்கலாம் என்ற சமன்பாட்டை உணர்ந்த பழுத்த அரசியல்வாதி அவர். யாழ் மேட்டுக்குடியின் நீட்சியாக இருக்கும் தமிழரசுக் கட்சிக்கு தற்போது தலைவரான எஸ் சிறிதரனும் மோடியின் சமன்பாட்டையே நம்புகின்றார்.

இவற்றுக்கு மறாக தனது சமூகத்தின் மத்தியில் மூட நம்பிக்கைகளைக் களைந்து அம்மக்களை அறியாமை எனும் அடிமைத்தளைகளில் இருந்து நீக்குவதை தன் வாழ்வியலாக மாற்றிக்கொண்டவர் அதிபர் பெருமாள் கணேசன். பெயர்பெற்ற பாடசாலைகளுக்கு போட்டி போட்டுச் செல்லாது, பின் தங்கிய பிரதேசங்களில், பாடசாலைக்கு ஆசிரியராகி, அதிபராகி அதனை மேன்நிலைக்கு கொண்டுவரப் பாடுபடுகின்ற அதிபர் பெருமாள் கணேசன் போன்ற மிகச் சிலர் இருப்பதால் கிளிநொச்சி மண் இன்றும் தன் கல்விநிலையில் முன்னேறத் துடிக்கின்றது. கல்வி நிலையில் பின் தங்கியுள்ள கிளிநொச்சியில் தமிழ் ஆசிரியர்களுக்கே போதாமை உள்ள போது ஆங்கிலக் கல்வியில் புலமைபெற்று அம்மண்ணில் ஆங்கில மொழியறிவையும் வளர்த்து வருகின்றார்.

அதிபர் பெருமாள் கணேசனுக்கும் எனக்குமான உறவு அகலமான, ஆழமான, நீண்ட உறவல்ல. நாங்கள் அடிக்கடி உறவாடியவர்களும் உரையாடுபவர்களும் அல்ல. கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுக்கு ஓரிரு முறை உரையாடி இருப்போம். ஆனாலும் அந்த உறவு மிக ஆரோக்கியமானதாக இருக்கக் காரணம் இருவரிடமும் இருந்த சமூகத்தின் மீதான நேசம். அதனால் அதிபர் பெருமாள் கணேசன் பற்றிய எனது விம்பம் அவர்சார்ந்த அவரைச் சூழ உள்ளவர்களால் கட்டப்பட்டது. இதற்கெல்லாம் மணிமகுடம் சுட்டியது போல் அமைந்தது அவருடைய அகச்சீற்றம். அவருடைய போராட்ட குணாம்சம். ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவர் முன்நிறுத்துகின்ற அடையாளம். அதனை அவர் எதிர்கொள்கின்ற பாணி. “நான் தோட்டக்காட்டான்!”. அதில் அவர் தன்னுடைய அடையாளத்தையே தன்னுடைய பலமாக மாற்றுகின்ற துணிச்சலைக் காண முடிகின்றது. இது வெறும் துணிச்சல் அல்ல. தன்நம்பிக்கையின் அடையாளம். இந்தத் துணிச்சல், ஒடுக்கும் மேட்டுக்குடிகளுக்கு சவாலாக உள்ளது. ஒரு சமூகத்தை சீர்குலைக்க வேண்டும் என்றால் அவர்களின் அடையாளத்தை கீழ்நிலைப்படுத்த வேண்டும். அவர்கள் யார் என்பதை வெளியே சொல்ல அவர்களே தயங்குகின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அதனையே காலம் காலமாக மேட்டுக்குடிகள் செய்தன. அவர்களை அந்த அடையாளத்தைப் பயன்படுத்தியே ஒடுக்கினர். பாதிக்கப்பட்டவர்கள் நிலவுக்குப் பயந்து பரதேசம் சென்றது போல் தங்களுக்கு வேறு அடையாளங்களை போர்த்திக்கொள்ள முயன்றனர். ஒடுக்குபவன் விடவில்லை. அவர்களின் அடையாளத்தை தோண்டி எடுத்து மீண்டும் அவர்களை அடிமைப்படுத்த முயற்சிக்கிறான். அதிபர் பெருமாள் கணேசன் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதனால் அதிபர் பெருமாள் கணேசனை யாராலும் ஒடுக்க முடியவில்லை, பாசத்தாலும் நட்பாலும் அல்லாமல்.

இலங்கையின் தமிழர் தாயகங்களில் யாழ்மாவட்டத்துக்கு இருக்கின்ற கல்விப் பாரம்பரியம் ஏனைய மாவட்டங்களுக்கு இல்லை. யாழ்ப்பாணத்தின் கல்விப் பாரம்பரியம் சிலநூறு ஆண்டு வரலாற்றைக் கொண்டது. காலனியாதிக்க காலம் முதலாக அங்கு ஒரு கல்விப் பாரம்பரியம் உருவானது. அது மேட்டுக்குடிகளுக்கான கல்வியாகவே அமைந்தது. அதன் தாக்கத்தை இன்றும் தமிர்களிடையே பரவலாகக் காணலாம். கல்வி என்பது காலனித்துவ காலத்தில் கத்தோலிக்க வெள்ளாளர்களுக்கானதாக இருந்து பின் ஆறுமுகநாவலரின் சைவ மறுமலர்ச்சியைத் தொடர்ந்து யாழ் வெள்ளாள ஆண்களுக்கானதாக மாறியது. பின்னாளில் அது யாழ் சைவ வேளாளர்களுக்கானதாக மாற்றமடைந்தது. யாழ் பல்கலைக்கழகத்தின் அண்மையில் வெளியான தமிழ் வாழ்த்துக் கூட கல்வியை யாழ் மாவட்டத்துக்கானதாகவே சித்தரிக்கின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாக விதிவிலக்காக அதிபர் பெருமாள் கணேசன் போன்ற கல்வி ஆளுமைகள் பல்வேறு சமூகங்களில் இருந்து உருவான போதும் இன்றும் கல்வி அனைவருக்குமானதாக உருவாக்கப்படவில்லை என்பது துரதிஸ்டவசமான உண்மை.

இலங்கை அரசினால் கொண்டுவரப்பட்ட இலவசக் கல்வித்திட்டம் என்பது இந்த நாகரீக உலகத்தின் மிக உன்னதமான வளர்ச்சித்திட்டம். உலகின் செல்வந்தர்களில் ஐம்பது வீதத்திற்கும் அதிகமானவர்களைத் தன்நாட்டில் கொண்டுள்ள உலகின் மிகச் செல்வந்த நாடான அமெரிக்காவில் கல்வி ஜனநாயகமயப்படுத்தப்படவில்லை. பிரித்தானியாவில் பல்கலைக்கழகம் சென்று திரும்பும் ஒவ்வொரு மாணவனும் 2 கோடி ரூபாய் கடனுடனேயே பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறுகின்றனர். ஆனால் சின்னஞ் சிறிய இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் மாணவர்கள் ஒரு சதம் கடன் இல்லாமல் வெளியே வருகின்றனர். இந்தப் பட்டதாரிகளை அமெரிக்காவும் கனடாவும் பிரித்தானியாவும் அவுஸ்திரேலியாவும் உடனேயே உள்வாங்குகின்றனர். இப்பட்டதாரிகளுடைய கல்வித்தரம் அம்மேற்கு நாடுகளின் கல்வித் தரத்துக்கு ஒப்பானதாக உள்ளது. இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வரும் மருத்துவர்களை மருத்துவ தாதிகளை நம்பியே பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனைகள் இயங்குகின்றன.

இலங்கையில் இலவசக் கல்வி இருந்த போதும் கல்விக் கட்டமைப்புகள் காலனித்துவத்தின் நீட்சியாகவே இன்றும் இருக்கின்றது. இக்கல்வித் திட்டம் பொருளாதார நிலையில் கீழ் மட்டத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மலையக மக்களை முழுமையாகச் சென்றடையவில்லை. தாய்மொழிக்கல்வி தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சம வாய்ப்பை அளித்தாலும் மொழிக்கு அப்பாலான பொருளாதார, பிரதேச, சாதிய தடைகள் இன்றும் பரவலாக உள்ளது. இத்தடைகளை நீக்குவதற்கான முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு சமூகம் அரசியல், பொருளாதார, இன, மத, சாதிய, பிரதேச அடிமைக்கட்டுக்களில் இருந்து விடுபட வேண்டுமானால் அந்த சமூகத்திற்கு கல்வி இன்றியமையாதது. ஆனால் ஆண்டாண்டு காலமாக நூற்றாண்டு காலமாக ஒடுக்குமுறைக்கு தொடர்ச்சியாக உட்பட்ட ஒடுக்கப்படும் சாதிகளும் மலையக மக்களும் அவர்களுடைய குழந்தைப் பருவம் முதலே கனவுகள் மிதிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அவர்களுக்கு விதிக்கப்பட்டது இதுதான் என்று நம்ப வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளனர். அவர்களது தன்னம்பிக்கைகள் முளையிலேயே கிள்ளி எறியப்படுகின்றது.

காலனித்துவத்தின் நீட்சியாக உள்ள இலங்கைக் கல்விக் கட்டமைப்பு இங்குள்ள அதிகாரக் கட்டமைப்புக்கு சேவகம் செய்கின்ற வகையிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுவே பிரித்தானிய கல்விக் கட்டமைப்பாகவும் உள்ளது. அதன்படி கல்வியில் மேன்நிலை அடையக்கூடியவர்களை மட்டும் வளர்த்தெடுத்து பயன்படுத்திக்கொள்ளும் இம்முறை ஏனையவர்களைப் பற்றிக் கணக்கெடுப்பதில்லை. இவ்வாறான சிந்தனைமுறைகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டு உயர் கல்வி வரை அது அனைவருக்குமான வகையில் ஜனநாயகப்படுத்தப்படாவிட்டால் சமூக ஏற்றத் தாழ்வுகளும் முரண்பாடுகளும் ஒடுக்குமுறையும் இன்னும் ஆண்டாண்டு காலத்திற்குத் தொடரும்.

துரதிஸ்டவசமாக கல்வியில் மேன்நிலை அடைபவர்கள் பெரும்பாலும் மேட்டுக்குடியினராகவே இருக்கின்றனர். ஏனெனில் அவர்களுக்கு அந்தக் கல்விக் கட்டமைப்பில் வெற்றிபெறுவதற்கான தடைகள் பாரிய அளவில் இருப்பதில்லை. ஆனால் மலையக மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பொருளாதார நிலை, குடும்பத்தினுடைய கல்வி நிலை, அவர்களுடைய குடும்பத்தில், அவர்கள் வாழ்கின்ற சமூகத்தில் கல்வி பற்றிய பார்வை, அவர்களுடைய சூழலில் கல்விக்கான வாய்ப்பு வசதிகள், கல்விக்கான நவீன சாதனங்களுக்கான வாய்ப்பு என மலையக மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தொடர்ந்தும் கல்வியில் முன்னேற முடியாமல் பாரிய தடைகளை எதிர்கொள்கின்றனர்.

இத்தடைகளைத் தாண்டி அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் முன்னேறுகின்ற போது கல்வி மற்றும் அதிகாரக் கட்டமைப்புகளின் மேல்மட்டங்களில் உள்ளவர்கள் அவர்களுக்கு தடைகளைப் போட்டு அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கின்றனர். மலையக, ஒடுக்கப்பட்ட சமூகங்களில் உள்ளவர்கள் பாடசாலைகளுக்கு அதிபர்களாக வருவது, கல்வி அதிகாரிகளாக வருவது, பல்கலைக்கழக துறைசார் தலைவர்களாக வருவது, துணை வேந்தர்களாக வருவது, மாகாணசபை உறுப்பினர்களாக வருவது, பாராளுமன்ற உறுப்பினர்களாக வருவது இன்றுவரை குதிரைக்கொம்பாகவே உள்ளது. அன்று ‘சூரனின் சுயசரிதை’ நூலில் குறிப்பிட்டவாறு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கட்டிய ஆரம்பப் பாடசாலையை தங்களை உயர்சாதியினர் என்று சொல்லிக் கொள்பவர்கள் எரித்து நாசமாக்கிய வரலாறு இன்று இடம்பெறவில்லை. ஆனால் மலையக மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்தை தடுப்பதற்கு இக்கட்டமைப்புகளும் கட்டமைப்புகளில் உள்ளவர்களும் துணைபோகின்றனர்.

கல்வி என்பது சான்றிதழ்களாக மட்டும் குறுக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியில் வினைத்திறனற்றவர்களாக உள்ளனர். நடைமுறையில் உள்ள தொழில்நுட்பக் கல்வியும் பிரதேசத் தேவைகளைச் சார்ந்ததாகவோ உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிப்பதாகவோ இல்லை. கைக்கடக்கமான அப்பிளைக் கொண்டு ஐரோப்பாவில் நூற்றுக்கு மேற்பட்ட துணைப்பொருட்கள் உள்ளன. ஆனால் நாம் எவ்வளவோ பெரிய பலாப்பழத்தை வைத்துக்கொண்டு பெரிதாக ஏதும் செய்யவில்லை.

கல்வி என்பது அனுபவம். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான பொறிமுறை. இன்றில்லாத, நாளை உருவாகப் போகின்ற பிரச்சினையைத் தீர்க்கின்ற ஆற்றலை இன்றைய கல்வி வழங்க வேண்டும். ஆனால் நடைமுறையில் இன்றுள்ள பிரச்சினையைக் கூட தீர்க்க முடியாத கல்வியைத்தான் தற்போதுள்ள கல்வி;க் கட்டமைப்புக்கள் இன்று வழங்குகின்றன. அதனால் தான் மலையக மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இன்றைய கல்விக் கட்டமைப்பில் இருந்து அந்நியப்பட்டுள்ளனர். அவர்களுடைய வாழ்நிலையை, வாழ்க்கைச் சூழலை, கலாச்சாரத்தை புரிந்துகொள்ளாதவர்கள் தான் இன்றைய கல்வி மற்றும் அதிகாரக்கட்டமைப்புகளில் உள்ளனர். ஆசிரியர்களாகவும் அதிபர்களாகவும் பெரும்பாலும் உள்ளனர். இந்த அந்நியத்தன்மை, இந்த இடைவெளி அகற்றப்பட வேண்டும்.

இதனையே பதியுதீன் மொகமட் கல்வி அமைச்சராக இருக்கும் போது மாற்றி அமைத்தார். முஸ்லீம் பிரதேசங்களில் முஸ்லீம் பாடசாலைகளில் முஸ்லீம்களே ஆசிரியர்களாக நியமிக்கப்படும் வகையில் ஆசிரியர் தெரிவுக்கான தகமை எல்லையை சற்று தளர்த்தினார். முஸ்லீம் பாடசாலைகளில் அவர்களின் வாழ்நிலை, வாழ்க்கைச் சூழல், கலாச்சாரத்தை உணர்ந்துகொண்டவர்கள், புரிந்து கொண்டவர்கள் ஆசிரியர்களாக ஆகினர். அச்சமூகத்தின் மத்தியில் ஒரு கல்விப் பாரம்பரியம் உருவாக ஆரம்பித்தது. இந்நிலை வெவ்வேறு சமூகங்கள் மத்தியிலும் ஏற்படவேண்டும். ஒவ்வொரு பாடசாலையும் அச்சமூகத்திலிருந்து வருகின்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கல்வியும் வாய்ப்புகளும் மேலும் மேலும் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும்.

கல்வியில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை குறைக்க முடிந்தால் சமூகத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும் ஒடுக்குமுறைகளையும் நீக்க முடியும். ஆனால் தற்போதைய கல்விமுறை என்பது ஆரம்பம் முதலே மிக ஏற்றத் தாழ்வானதாக உள்ளது. முன்பள்ளிகளை எடுத்துக்கொண்டால் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் 4,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாய் வரை வேறுபடுகின்றது. இதில் யார் எந்த முன்பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புவார்கள்? எந்த முன்பள்ளியில் கற்கும் பிள்ளையின் கல்வியின் எதிர்காலம் நிச்சயமானதாக இருக்கும். இந்நிலை தற்போது தனியார் பல்கலைக்கழகங்களின் வருகையோடு உயர்கல்வியிலும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியோடு பாடசாலைகள் இரண்டாம் தரமானவையாக்கப்பட்டு பெரும்பாலான பாடசாலைகளின் தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது நாம் அனுபவ வாயிலாகக் கண்டுகொண்டது. தனியார் மருத்துவமனைகளின் வளர்ச்சியும் இதனையே காட்டுகின்றது. அதே போல் தனியார் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி அரச பல்கலைக்கழகங்களின் தரவீழ்ச்சியை இன்னும் ஊக்குவிக்கும். அரச பாடசாலைகளை, அரச பல்கலைக்கழகங்களை தரமுயர்த்தாமல் கல்வியை தனியார் கைகளில் ஒப்படைப்பது நீண்டகாலத்தில் கல்வியில் தற்போதுள்ள ஏற்றத் தாழ்வுகளை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும். மலையக மக்களுக்கு, பொருளாதார ரீதியில் கீழ்நிலையில் உள்ள மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியை எட்டாக் கனியாக்குவதற்கான முயற்சியாகவே இது அமையும்.

இதனைத் தடுப்தற்கு அதிபர் பெருமாள் கணேசன் போன்ற தீர்க்கமான சிந்தனையுடையவர்கள் பலர் பல்வேறு சமூக மட்டங்களில் இருந்தும் உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களில், பாடசாலைகளில் தங்கள் சேவையை ஆற்ற வேண்டும். பொறுப்பான பதவிகளில் அதிபர் பெருமாள் கணேசன் போன்ற பொறுப்பான மனிதர்கள் அமர்வது மட்டுமே வளமான, ஏற்றத் தாழ்வற்ற சமூக உருவாக்கத்திற்கான முன்நிபந்தனையாக இருக்க முடியும். அதிபர் பெருமாள் கணேசனின் இந்த மணிவிழா அவருடைய கடந்த கால கல்விப்போராட்டத்தை நினைவு கூரவும் அவருடைய அடுத்த இலக்கை செயற்திட்டத்தை திட்டமிடவும் உதவும். அண்மைய எதிர்காலத்தில் இவர் ஓய்பெற முடியாது. இவருக்கான பொறுப்புகள் அதிகம்.

எம்மோடு சம காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு கல்விப் போராளியைப் பற்றிய ஒரு பதிவை வரைய முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி!

நட்புடன் த ஜெயபாலன்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • யோகா
    யோகா

    அருமையான பதிவு 👌

    Reply