கதிர்காமம் புனித பூமியில் யாசகத்தில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுத்த போதிலும் அவர்களது பெற்றோர்கள் பிள்ளைகளை மீண்டும் யாசகத்தில் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கதிர்காமம், செல்ல கதிர்காமம், கிரிவிகாரை ஆகிய பகுதிகளில் இந்த சிறுவர்கள் தனியாகவும் பெற்றோருடனும் யாசகத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. 5, 10, 16 வயதுக்குட்பட்ட பல சிறுவர்கள் பெற்றோருக்குத் தெரிந்தே யாசகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலான சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சிறுவர்கள் பல தடவைகள் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சில சிறுவர்கள் பூஜை தட்டுக்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.