யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு சர்வதேச நாடுகள் இலங்கை அரசுக்கு விடுத்துவரும் அழுத்தங்கள் தொடர்பாகவும் நோர்வேயுடனான இராஜதந்திர உறவைத் துண்டித்துக்கொள்ளுமாறு இலங்கை அரசுக்குள்ளிருந்து பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் தொடர்பாகவும் இலங்கை அரசின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம இன்று நாடாளுமன்றில் தெரிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டமையைத் தொடர்ந்து அந்நாட்டுடனான இராஜதந்திர உறவைத் துண்டித்துவிடுமாறு அரசுடன் இணைந்துள்ள சில கட்சிகளும் அரசுக்கு வெளியேயுள்ள கட்சிகளும் அரசுக்கு அழுத்தங்கொடுக்கத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக அரசில் இணைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய மற்றும் விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திரமுன்னணி ஆகிய கட்சிகள் இந்த அழுத்தங்களைத் தொடர்ச்சியாகக் கொடுத்து வருகின்றன. இது ஒருபுறமிருக்க, இலங்கையின் வடக்கில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் பலவும் இலங்கைக்கு அழுத்தங் கொடுத்து வருகின்றன.
இந்த இரண்டு விடயங்கள் தொடர்பான அரசின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம இன்று நாடாளுமன்றில் தெரிவிப்பார் என்று நம்பகரமான வட்டாரங்கள் கூறுகின்றன.