மத்தியில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த கூட்டத்தில் அத்வானி பேசியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோடிக்கணக்கான மக்களின் கனவை மத்தியில் பா.ஜ. தலைமையில் ஆட்சி அமைந்தால் நிறைவேற்றுவோம்.
சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவதாகக் கூறி ராமர் பாலத்தை இடிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயற்சி செய்தது. சேது சமுத்திர திட்டத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கட்சியும் (அதிமுக) எதிர்ப்பு தெரிவிக்கிறது.
இந்தியாவில் இருந்து ரூ.7 லட்சம் கோடி கறுப்பு பணம் சுவிஸ் உட்பட பல வெளிநாட்டு வங்கிகளில் முடங்கியுள்ளது. பா.ஜ. ஆட்சி அமைந்தால் அந்தப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்றார்.
மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னாவில் பா.ஜ. தலைவர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ராமபிரானையே கற்பனை கதாபாத்திரம் என்று கூறி இந்துக்களை மத்திய அரசு இழிவுப்படுத்தியது. சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் இந்துக்கள் வழிபடும் ராமர் பாலத்தை இடிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. மாற்றுவழியில் இந்த திட்டத்தை நிறைவேற்றவும் மறுக்கிறது. மத்தியில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால், சேது சமுத்திர திட்டத்தை இப்போது நிறைவேற்ற முடிவு செய்துள்ள வழியில் நிறைவேற்ற விடாமல் ரத்து செய்வோம் என்றார்.