அண்மை யில் வெளிவந்த 2008 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கு பரீட்சைத் திணைக்களம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
இந்த விண்ணப்பங்களை எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ கிடைக்கக்கூடிய வகையில் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் நேரடியாகவும் பதிவுத் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
ஒரு பாடத்துக்கு 150.00 ரூபா என்ற அடிப்படையில் மீளாய்வுக் கட்டணம் அறவிடப்படுகிறது. உரிய கட்டணத்தை அஞ்சல் அல்லது உப அஞ்சல் அலுவலகங்களில் செலுத்தி பற்றுச் சீட்டின் மூலப் பிரதியை விண்ணப்பப் படிவத்தின் மறுபுறம் ஒட்டி அனுப்பிவைக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு விண்ணப்பம் வீதம் அனுப்ப வேண்டுமென பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.