யாழ்ப்பாணம் – வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (31) வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஞாயிற்றுக்கிழமை (31) வாள்களுடன் சென்ற குழு ஒன்று பருத்தித்துறை தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் உள்ள நபர் ஒருவர் மீது வாளால் வெட்டியதுடன் வாளால் வெட்டியபோது கீழே வீழ்ந்த கை துண்டையும் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாள் வெட்டுக்கு இலக்கான நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கையை இழந்தவர் செல்வநாயகம் செந்தூரன் எனும் 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆவார்.
இதேவேளை அண்மையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் வாள்வெட்டு சம்பவங்கள் சடுதியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. தீர்ப்பு நடவடிக்கைகளில் காணப்படும் தாமதமும் – வாள்வெட்டு குழுக்கள் மீதுள்ள பயமும் இது தொடர்பாக மக்கள் வாய்திறக்க முடியாத சூழலை உருவாக்கியுள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். கடந்த மாதம் வட்டுக்கோட்டையில் கடற்படை முகாமில் நடந்த வாள்வெட்டுத்தாக்குதலுக்கு இலக்காக இளம் குடும்பஸ்தர் பலியாகி இருந்த நிலையில் இன்று இந்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது.