மாவீரர் நாளை தடுப்பதற்கான அனைத்து சட்டங்களையும் அமுல்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – பொலிஸ் மா அதிபர் தேசபந்து

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனுஸ்டிக்கப்படுகின்ற மாவீரர் நாளை தடுப்பதற்கான அனைத்து சட்டங்களையும் அமுல்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான ஆனந்த ஜயமான்னவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

 

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான கரலியத்த மற்றும் மாயாதுன்னே, கோரையா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

 

இதேவேளை வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம, மகாவீரர் கொண்டாட்டங்கள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான முழுமையான அறிக்கையை தாம் சமர்ப்பித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றில் நேற்று வாக்குமூலமொன்றையும் வழங்கியிருந்தார்.

 

வடக்கு கிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் இடம்பெறுகின்ற நினைவு நாளுக்கு எதிராக சட்டத்தை சிறந்த முறையில் அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் மன்றில் குறிப்பிட்டிருந்தார்.

 

இவ்வாறான சட்டவிரோத நிகழ்வுகள் தொடர்பில் அதிகபட்சமாக சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்தவுள்ளதாக நீதிமன்றில் அரசாங்கம் சார்மாக முன்னிலையான சட்டத்தரணியும் குறிப்பிட்டுள்ளார்.

 

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்த சட்டவிரோத செயல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் நீதிமன்றில் உறுதிமொழி வழங்கியிருப்பதால், இந்த மனுவை தொடர வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார்.

 

இதன்படி, குறித்த மனுவை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

 

இதனைத் தொடர்ந்து மனு மீதான விசாரணையை நிறைவு செய்வதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *