அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவும் தென்படவில்லை எனவும், மாறாக ஏனைய சிங்களத் தலைவர்களை விடவும் தமிழர் நலன்கள் தொடர்பான மிகக் குறைந்தளவிலான கரிசனையுடனேயே அவர் பேசியிருக்கின்றார் எனவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறிதரன் விசனம் வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த வியாழக்கிழமை (04) நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வட மாகாண மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, ‘எமக்கு வாக்களியுங்கள் என்றோ, 13 பிளஸ் தருகின்றோம் அல்லது சமஷ்டியை தருகின்றோம் – எமக்கு வாக்களியுங்கள் என்றோ கூறுவதற்காக நான் இங்கு வரிவல்லை. வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பிரதேச பேதங்களும், இன, மதபேதங்களுமின்றி நாம் அனைவரும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணையவேண்டும். நாட்டை புதியதொரு பாதையில் கொண்டுசெல்லவேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை முன்னிறுத்தி ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைக்க முன்வருமாறு வடக்கின் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்’ என்று தெரிவித்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சித் தலைவர் எஸ்.சிறிதரன், அநுரகுமார திஸாநாயக்கவின் உரையில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவும் தென்படவில்லை எனவும், மாறாக, ஏனைய சிங்களத் தலைவர்களை விடவும் தமிழர் நலன்கள் தொடர்பான மிகக் குறைந்தளவிலான கரிசனையுடனேயே அவர் பேசியிருக்கின்றார் எனவும் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று யுத்தம் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் சுமார் 40,000 இராணுவ வீரர்களை இணைத்தமை, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட வடக்கு, கிழக்கு இணைப்பை பிரிப்பதில் முன்னின்று செயற்பட்டமை, யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதுகுறித்து குறைந்தபட்சம் அனுதாபம் கூட வெளியிடாமை போன்ற பல்வேறு பிரச்சினைக்குரிய விடயங்கள் அநுரகுமார திஸாநாயக்க தரப்பில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மைய காலங்களில் வட, கிழக்கு மாகாணங்களில் பௌத்த பிக்குகளின் பங்கேற்புடன் இடம்பெற்றுவரும் அத்துமீறல்கள் தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க ஒருமுறைகூட கண்டனத்தை வெளிப்படுத்தவில்லை எனக் குறிப்பிட்ட சிறிதரன், இன மதவாதமற்ற, அனைத்து மக்களுக்குமான சிறந்த தலைவர் என்ற ரீதியில் அநுரகுமார திஸாநாயக்க முதலில் தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், 13 ஆவது திருத்தம் அல்லது சமஷ்டி முறையிலான தீர்வு குறித்து எவ்வித உத்தரவாதத்தையும் வழங்குவதற்கு தான் வரவில்லை என்று கூறுபவருக்கு தமிழ் மக்கள் எந்த அடிப்படையில் வாக்களிப்பார்கள் என்று கேள்வி எழுப்பிய சிறிதரன், அநுரகுமார திஸாநாயக்க தமிழர்களிடத்தில் மாத்திரமன்றி, சிங்கள மக்கள் மத்தியிலேயே இன்னமும் தன்னை ஒரு சிறந்த தலைவனாக காண்பிக்கவில்லை என்றார்.