தாங்கள் காலம் காலமாக வாழ்ந்த பூர்வீக நிலங்கள் பாதிக்கப்பட்டு தங்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டு மக்களுக்கும் பிரதேசத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் முதலீட்டு முயற்சிகளை தங்களது பிரதேசத்துக்குள் அனுமதிக்காதீர்கள் என்ற பொன்னாவெளி மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஒருபோதும் நிராகரிக்க முடியாது. அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை சமத்துவக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
பொன்னாவெளியில் நேற்று (05) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
பொன்னாவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுன்னக்கல் அகழ்வு காரணமாக அப்பிரதேசத்தில் ஐந்துக்கு மேற்பட்ட கிராமங்கள் முற்றுமுழுதாக பாதிக்கப்படும்.
100 மீற்றருக்கு மேல் ஆழத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுன்னக்கல் அகழ்வு காரணமாக அந்த பிரதேசம் முழுவதும் உவராக மாறிவிடும். இதனால் காலம் காலமாக பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்கள் தங்களின் சொந்த நிலத்தை விட்டு வெளியேறவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை உருவாகும். எனவே தங்களது பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சுன்னக்கல் அகழ்வு நடவடிக்கையினை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என அம்மக்கள் தெரிவிப்பதில் எவ்வித தவறும் இல்லை.
அந்த மக்கள் இன்றைக்கு 270 நாட்களை கடந்து அமைதி வழியில் தங்களது நிலத்தை பாதுகாக்க போராடி வருகின்றார்கள். எனவே அவர்களின் நியாயமான போராட்டத்தை மதித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, வன்முறைகளை தூண்டிவிடும் வகையில் வெளி பிரதேசங்களிலிருந்து மக்களை அழைத்துச் சென்று இனத்துக்குள்ளே மோதவிட்டு அதில் தங்களின் சுயலாபங்களை நிறைவேற்றிக்கொள்ளும் மிக மோசமான நடவடிக்கைகளை மக்களோடு நின்று சமத்துவக் கட்சியும் வன்மையாக கண்டிக்கிறது.
மேலும், பொன்னாவெளி மக்களோடு நாம் தொடர்ந்தும் நிற்போம். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை குரல் கொடுப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.