புலிகளின் பயங்கரவாதப் போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்கள் அனைத்தும் இவ்வருடம் மூடப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

புலிகளின் பயங்கரவாதப் போரின் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்கள் அனைத்தும் இவ்வருடம் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 

தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று நலன்புரி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அங்குத் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 10. இதில் 9 குடும்பங்களுக்குக் காணிகள் விடுவிக்கப்பட்டு இவ்வருட இறுதிக்குள் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒரு குடும்பத்திற்கு மாத்திரமே தமது பூர்வீக காணிகளை வழங்குமாறு பலமாகக் கோரி வருகின்றனர்.

அவர்களுடன் கலந்து பேசி இணக்கப்பாட்டுக்கு வருமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்றப் பிரிவினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களைக் கையளிக்கும் நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை (7) அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

கிளிநொச்சி மாவட்டத்தில் செலவநகர் நீர் சுத்திகரிப்பு நிலையம், உருதிபுரம் கிழக்கு நீர் சுத்திகரிப்பு நிலையம், வவுனியா மாவட்டத்தில் கங்கன்குளம் நீர் சுத்திகரிப்பு நிலையம், வவுனியா தெற்கில் அவரந்தலாவ நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை அமைச்சர் மக்களின் பாவனைக்குத் திறந்து வைத்தார்.

 

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதுடன், அவர்களை அவர்களது பூர்வீக கிராமங்களில் மீள் குடியேற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மீள்குடியேற்றப் பிரிவினரால் ஒழுங்கமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகின்றன.

தற்போது 1502 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களில் அனுமதிக்கப்படாமல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

212 குடும்பங்களுக்குக் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில் வீடுகள் வழங்கப்படும். காணி இல்லாத ஏனைய அனைவருக்கும் காணிகளை விரைவில் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

 

தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டதன் பின்னர் அவர்களுக்கான காணிகள் எதிர்காலத்தில் விடுவிக்கப்படும் என மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, இந்த வருடம் கண்ணிவெடிகளை அகற்றி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் 2550 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு அபிவிருத்திக்காக 2000 மில்லியன் ரூபாவும், உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாவும், கண்ணிவெடி அகற்றலுக்கு 50 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

மீள் குடியேறியுள்ள மக்களுக்குத் தேவையான நீர், மின்சாரம், மலசலக்கூட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஒரு குடும்பத்திற்கு 30,000 ரூபாய் வழங்கப்படும்.

 

இதேவேளை, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதியுதவியுடன் சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக 50 நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு மையங்களை நிறுவும் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மேலும் 50 புதிய நனோ நீர் திட்டங்களை இந்த வருட இறுதிக்குள் நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

 

அதன்படி, தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

 

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *