உலகளாவிய பாலின அடிப்படையிலான வேதன இடைவெளி சராசரியை விடவும் இலங்கையில் உயர்வாகப் பதிவு !
உலகளாவிய ரீதியில் நிலவும் பாலின அடிப்படையிலான வேதன இடைவெளியானது சராசரியாக 20 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இலங்கையில் நிலவும் வேதன இடைவெளி இந்த உலகளாவிய சராசரியை விடவும் அதிகம் என்பதுடன், குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் காணப்படும் வேதன இடைவெளியை விட உயர்வானதாகும் எனச் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புதிய ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
‘உலகின் பெரும்பாலான நாடுகளில் நிலவும் பாலின அடிப்படையிலான வேதன இடைவெளியானது தொழிற்சந்தையில் காணப்படும் பாலின சமத்துவமின்மையைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது.
சமூகநீதி மற்றும் பொருளாதார சுபீட்சம் ஆகிய இரு கோணங்களிலும் அதற்குத் தீர்வு காணவேண்டியது அவசியமாகும்.
பாரிய அளவிலானதும், உரிய காரணங்கள் தெளிவுபடுத்தப்படாததுமான பாலின அடிப்படையிலான வேதன இடைவெளியானது தொழிற்சந்தையில் சமத்துவமின்மையைத் தோற்றுவிப்பதுடன் மாத்திரமன்றி, பெண்கள் தொழிற்சந்தைக்குள் பிரவேசிப்பதிலும், முன்னேற்றமடைவதிலும் தடைகளை ஏற்படுத்தும்’ எனச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு இலங்கை தொடர்பான அதன் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி இலங்கையில் நிலவும் பாலின அடிப்படையிலான வேதன இடைவெளியைக் குறைப்பதற்கு உதவும் நோக்கில் இந்த ஆய்வறிக்கையைத் தயாரித்திருப்பதாகவும், இவ்வாய்வுக்காக 2013 – 2021 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நாட்டில் நிலவிய வேதன இடைவெளி தொடர்பான தரவுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், 2019 ஆம் ஆண்டு தரவுகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட விடயங்கள் வருமாறு:
இலங்கையின் தொழிற்படையில் ஆண்களின் பங்களிப்புடன் ஒப்பிடுகையில் பெண்களின் பங்களிப்பு மிகக்குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. குறிப்பாக 2019 ஆம் ஆண்டு தொழிற்படையில் ஆண்களின் பங்களிப்பான 80 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் பெண்களின் பங்களிப்பு 40 சதவீதம் எனும் மிகக்குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டது.
இதேபோன்ற இடைவெளி 2013 ஆம் ஆண்டிலும் பதிவாகியிருப்பதானது இலங்கையில் பாலின அடிப்படையிலான வேதன இடைவெளி தசாப்தங்களுக்கும் மேலாக நீடிப்பதைக் காண்பிக்கின்றது. அதேவேளை வயது அதிகரிக்கும்போது வேதன இடைவெளியும் அதிகரிப்பதை அவதானிக்கமுடிகின்றது.
அதாவது 15 – 24 வயதுடைய தொழிலாளர்கள் மத்தியில் 18 சதவீதமாகக் காணப்படும் பாலின அடிப்படையிலான வேதன இடைவெளி, வயது முதிர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் 50 சதவீதம் வரை உயர்வடைந்திருக்கின்றது.
2019 ஆம் ஆண்டு தரவுகளின்படி பெண் தொழிலாளர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கு வழங்கப்படும் வேதனமானது, ஆண்களுக்கு வழங்கப்படும் வேதனத்திலும் பார்க்க 27 சதவீதம் குறைவானதாகக் காணப்படுகின்றது. முறைசாரா தொழில்கள் மற்றும் கல்வித்தகைமை குறைவான தொழில்களில் ஈடுபடுவோர் மத்தியில் இந்த இடைவெளி மேலும் உயர்வாக உள்ளது.
அதுமாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் நிலவும் பாலின அடிப்படையிலான வேதன இடைவெளியானது சராசரியாக 20 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கையில் நிலவும் வேதன இடைவெளி இந்த உலகளாவிய சராசரியை விடவும் அதிகம் என்பதுடன், குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் காணப்படும் வேதன இடைவெளியை விட உயர்வானதாகும்.
அதேவேளை அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொழிற்படை ஆய்வின்படி, 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் தொழிற்படை பங்கேற்பு வீதம் குறிப்பிடத்தக்களவினால் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு 49.8 சதவீதமாகக் காணப்பட்ட தொழிற்படை பங்கேற்பு வீதம், 2023 இல் 48.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வீதமானது நாட்டில் தொழில்களில் ஈடுபடுவோர் மற்றும் தொழில்வாய்ப்பை முனைப்புடன் தேடுவோர் ஆகிய இருதரப்பினரையும் குறிக்கின்றது.