2024 ஆம் ஆண்டு தமிழர்களாகிய நாங்கள் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடியதான தீர்மானமாக இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (14) பல்வேறு நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு, இருதயபுரம் மற்றும் கறுவப்பன்கேனி பகுதியில் உளள இளைஞர் விளையாட்டுக் கழகம் ஒன்றினால் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பல்வேறுபட்ட விளையாட்டு நிகழ்வுகள் நேற்று மாலை இடம் பெற்றது.
இந்நிகழ்வில் தலையணை அடித்தல், மெதுவாக மோட்டார் சைக்கிள் ஓடுதல், கயிறு இழுத்தல், தேங்காய் துருவுதல், தொப்பி மாற்றுதல் போன்ற பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் ஆண்கள் பெண்கள் சிறுவர்களுக்கென இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்து கொண்டதுடன் விளையாட்டு கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
2024 ஆம் ஆண்டு சித்திரை மாதம் புதிய வருடம் பிறந்திருக்கின்றது இந்த புதிய வருடத்திலேயே எமது தமிழ் மக்களுக்கு தமிழ் பேசும் மக்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை நாங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய அவா.
எங்களுடைய தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை நமது அரசியல் அபிலாசைகளை இந்த வருடத்தில் பூர்த்தியாக வேண்டும் என்பது நமது அனைவருடைய அவாவாக இருக்கின்றது அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு தேர்தல்கள் நிறைந்த வருடங்களாக இருக்க கூடும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.
இந்த காலப்பகுதியில் நமது மக்கள் ஒரே ஒரு விடயத்தை மாத்திரம் மனதில் வைத்துக் கொண்டு எமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த தேர்தலில் முடிவுகளை எடுக்க வேண்டும் 2024 ஆம் ஆண்டு இன்று நாம் சித்திரை புத்தாண்டை கொண்டாடுகிறோம் ஆனால் இன்னுமொரு மாதம் சென்றால் மே 18ஆம் தேதி 15 வருடங்களுக்கு முதல் எமது மக்கள் முள்ளிவாய்க்காலில் அந்த இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாக போகின்றது.
இந்த 15 வருடங்களாக நமது மக்களுக்கு நீதி இல்லாமல் நீதியை கோரிக் கண்டு நீதிக்காக ஏங்கிக் கொண்டு இருக்கின்ற சமூகமாக இருந்து கொண்டிருக்கின்றோம்.
அந்த வகையில் இந்த வருடத்தில் நாங்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் அரசியல் ரீதியாக எம்முடைய இனம் சார்ந்த நமது இனத்தை தலை நிமிர்ந்து வாழ வைக்க கடிய வகையில் நமது இனத்திற்கான நீதியை கேட்டு கிடைக்கக்கூடிய வகையான தீர்மானங்களை எமது மக்கள் எடுக்க வேண்டும்.
நேற்றைய தினம் பார்த்தேன் ஒரு அமைச்சர் கூறி இருந்தார் நிமல் சிறிபாலடி சில்வா என்கின்ற அமைச்சர் இருக்கின்றார் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இந்த நாட்டினுடைய ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் கூட அந்த அமைச்சர் அவருடைய அரசாங்கத்தின் அமைச்சராக இருந்திருப்பார் என்று கூறி இருக்கின்றார்.
தமிழ் மக்களாகிய நாங்கள் இந்த இடத்தில் இன்று நீதியினை கோறுகின்றோமே தவிர இந்த ஊழல் மோசடிகள் செய்யும் அமைச்சுப் பதவிகளையோ அல்லது ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அமைச்சர்களை எமது பக்கம் எடுப்பதோ ஒருபோதும் செய்யப் போவதில்லை.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு தமிழர்களாகிய நாங்கள் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடியதான தீர்மானமாக இருக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன் என தெரிவித்தார்