கடந்த 3 நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த 3 நாட்களில் இடம்பெற்ற 167 வாகன விபத்துக்களில் 134 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தினம் மாத்திரம் 76 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் திடீர் விபத்துக்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் 50 சதவீதத்தால் குறைந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார்.
வழமையாக நாளொன்றில் சுமார் 300 நோயாளர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதாகவும், இந்த முறை 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் 160 முதல் 165 நோயாளர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு வீட்டினுள் வீழ்தல், வாகன விபத்து, விளையாட்டு விபத்து, பட்டாசு வெடித்தல் போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதேவேளை, பட்டாசு வெடித்ததினால் காயமடைந்த மூவர் தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் துஷின குணவர்தன தெரிவித்துள்ளார்.