புலிப்பயங்கரவாத அமைப்புடன் இருந்ததற்காக எல்லா பழிகளையும் என் மீது போடாதீர்கள் – நாடாளுமன்றத்தில் பிள்ளையான்!

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என நாடாளுமன்றத்தில் விழித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் தன்மீது சுமத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நேற்று சபையில் சாணக்கியன் பிள்ளையான் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறிய வேண்டுமானால் பிள்ளையானை கைது செய்து விசாரணை செய்யவேண்டும் என நேற்று நாடாளுமன்றத்தில் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

 

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019ஆம் ஆண்டில் இடம்பெற்றிருந்தாலும் அதனுடன் தொடர்புடைய குழுக்கள் கடந்த 2005ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டில் செயற்பட்டு வந்துள்ளதாகவும் இரா.சாணக்கியன் நேற்று சபையில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளதாகவும் ஆனால் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு இடமளிக்காது உடலை எரித்துள்ளதாகவும் இரா.சாணக்கியன் சபையில் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இன்று சபையில் சாணக்கியனின் கருத்தினை மறுத்துக் கருத்து வெளியிட்டிருந்ததுடன், தானும் ஏற்கனவே ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பில் இருந்ததாகவும் அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் குறிப்பிட்டார்.

 

அத்துடன் ஜே.வி.பி உள்ளிட்ட அமைப்புக்களும் பல பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தான் யார் என்பதை தனது மக்கள் நன்கு அறிவார்கள் எனவும், இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மேலும் குறிப்பட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *