பாதுகாப்பு வலயத்தில் மூன்றில் ஒரு பகுதியை படையினர் இப்போது கைப்பற்றியுள்ளனர் என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
இராணுவத்தின் 55 ஆம் 58 ஆம் படையணியினர் பாதுகாப்பு வலயத்துக்குள் புகுந்து பொது மக்களை விடுவித்துக்கொண்டு தெற்கு பக்கம் நோக்கி முன்னேறுகின்றனர். இன்னும் 8 கிலோ மீற்றர் தூரமான நிலப்பரப்பு மட்டுமே புலிகளிடம் எஞ்சியுள்ளது. இதற்குள்தான் பிரபாகரனும் மறைந்துள்ளார் என நம்புகிறோம். புலிகளின் தலைவலைரக் காப்பாற்றும் நோக்கில் இப்பிரதேசத்தில் சுய விருப்பத்துடனேயே பொது மக்கள் தங்கியுள்ளனர் என்ற பொய்ப் பிரசாரம் இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
புலிகளிடமிருந்து விடுதலை பெற அவர்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் நன்கு பயன்படுத்திக் கெண்டனர். கையில் கிடைத்த பொருட்களுடன் கடல் ஏரியில் மார்பளவு நீரில் இறங்கியேனும் தப்பிச் செல்ல அவர்கள் காட்டிய வேகம் இதனை நன்கு நிரூபிக்கின்றது.