வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளது – ஜோசப் ஸ்டாலின் விசனம் !

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருகின்றன.
அதிலும் குறிப்பாக, வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாடசாலையான யாழ். மத்திய கல்லூரியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு அதிபரை கூட மாற்றியிருக்கின்ற ஒரு செயற்பாடு நடந்திருக்கிறது.
இதே போன்று தான் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலுள்ள தேசிய பாடசாலையான பட்டிருப்பு கல்லூரியிலும் அரசியல் தலையீடுகளுடனான சம்பவமொன்று இடம்பெற்றிருக்கிறது.
அங்கும் நியமிக்கப்பட்ட அதிபரை மாற்றி வேறு ஒருவரை தற்போது அதிபராக நியமித்திருக்கின்றனர். அங்குள்ள அரசியல்வாதியான பிள்ளையான் கல்வி அமைச்சுடன் பேசி இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.
தமது அரசியல் நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடுகளை பாடசாலைகளில் செய்ய முயல்வது உண்மையில் ஒரு தவறான செயற்பாடாகும்.
எனவே, பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்வதை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *