நரேந்திர மோடி முஸ்லீம்களுக்கு எதிராக செயற்படுவதால் ஒலுவில் துறைமுக பகுதிக்கு இந்திய உயர்ஸ்தானிகரை அனுமதிக்க முடியாது – ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான்

இலங்கையிலுள்ள பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையங்களை அபிவிருத்தி செய்ய அல்லது பராமரிக்க போகின்றோம் என்ற தோரணையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடாது அது இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்து என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான் (Kaleelur Rahman) தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார், இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாணம் அம்பாறை (Ampara) மாவட்டத்தில் உள்ள ஒலுவில் துறைமுகத்தினை (Oluvil Port) அண்டிய பிரதேசங்கள் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டு துறைமுகமும் ஒழுங்காக இயங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது, இதனை சீரமைப்பதில் இலங்கை அரசாங்கமும், கிழக்கு மாகாண ஆளுநரும் அலட்சியப்போக்கினை கடைப்பிடித்து வந்தனர்.

இந்நிலையில் இதனைக், காரணமாக வைத்து அந்த துறைமுகத்தை சீரமைக்கும் நோக்கில் இந்திய உயர்ஸ்தானிகர் (indian Ambassidor) கிழக்குக்கு விஜயம் செய்து அந்தத் துறைமுகம் தொடர்பில் ஆய்வு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

எதிர்காலத்தில் இந்தத் துறைமுகத்தை அண்டை நாடான இந்தியாவுக்குக் கொடுப்பதற்காக ஒலுவில் கடலை அழிக்க பொறுப்பான அதிகாரிகள் குழு எவரேனும் சதி செய்கிறார்களா என்பதை அரசாங்கம் பரிசீலித்து, இந்தத் துறைமுகத்தை இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் எடுத்து, அபிவிருத்தி செய்து,பின் அதனை முதலீட்டு திட்டங்களுக்காகத் திறந்து வைக்க வேண்டும்.

வடகிழக்கில் அண்டை நாடான இந்தியாவுக்கு நிறைவான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் வடக்கு மற்றும் மலையக பிரதேசங்களிலும் இந்தியாவுக்கு வழங்கப்படும் பெரும் மரியாதை போதுமானது. இந்தியாவை மேலும் கௌரவிக்க வேண்டும் என்றால், புவியியல் ரீதியாக இலங்கையின் கிழக்கில் கொடுக்காமல் தெற்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் கொடுப்பது நல்லது என்பது எங்களின் கருத்து.

இலங்கை மண்ணுக்குள் இந்திய அமைதிப் படை நுழைந்து செய்த அநியாயங்களால் இந்தியாவைக் கண்டு நாம் மிகவும் பயப்படுகிறோம். இலங்கை உள்நாட்டு போரின் போது இந்தியா கடைபிடித்த ராஜதந்திர விடயங்கள், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் அறிக்கையின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட கருத்துக்கள் இந்தியா தொடர்பில் எங்களுக்கு மேலும் அச்சத்தை கொடுத்துள்ளது

 

கடந்த காலங்களில் இந்தியாவை நேசித்தோம் எனினும், தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) மற்றும் அவரது குழுவினர் தற்போதைய தேர்தல் காலத்தில் முஸ்லிம் சமூகத்தை அவமானப்படுத்தும் வகையில் பேசியதால், முஸ்லிம் சமூகம் வாழும் கிழக்கு மாகாணத்தில் இந்திய பிரவேசத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே முஸ்லிம் சமூகத்தை அவமரியாதை செய்யும் ஒரு நாட்டின் அரச தலைவருக்கு எதிராக அறிக்கை விடாமல் பயந்து அவர்களுக்கு அடிபணிந்து இருக்கும் அரசியல்வாதிகள் அந்த நாட்டின் தூதுவரை கிழக்கு மாகாணத்திற்கு அழைக்க வேண்டாம் என கிழக்கு மாகாணத்தில் அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

கிழக்கின் உரிமைகள், சொத்துக்கள், இருப்புக்கள், பாதுகாப்பு தொடர்பில் கிழக்கு மாகாணத்தின் மத, அரசியல் மற்றும் சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் விழிப்புடன் இருக்குமாறும் இவ்வாறான காட்டிக்கொடுப்புக்களுக்கு எதிராக எழுந்து நின்று குரல் கொடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *