டிஜிட்டல்மயமாக்கலின் மூலம் இந்தியா அடைந்துள்ள அசுர வளர்ச்சியுடன் நாமும் இணைந்து பயணிக்க வேண்டும். திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்கள் இந்தியாவின் முதலீடுகளுக்காக காத்திருக்கின்றன. எனவே இவற்றில் முதலீடுகளை மேற்கொண்டு இலங்கையின் வளர்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச ரோட்டரி கழகத்தின் 3220 மாவட்டத்தின் இலங்கை – மாலைதீவு மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை (26) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சேர, சோழ, பாண்டிய, பல்லவ காலத்திலிருந்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நெருங்கிய பிணைப்பு காணப்படுகிறது.
அந்த பிணைப்புடன் தொடர்ந்தும் முன்னோக்கி பயணிக்க வேண்டும். இந்தியாவைப் போன்று டிஜிட்டல் மயமாக்கலுடன் அபிவிருத்தியடைய வேண்டும்.
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கின்றோம். கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் இந்தியாவின் முதலீட்டுக்காக காத்திருக்கின்றன.
தற்போது சிலர் இலங்கையின் எதிர்காலத்துக்கான திட்டம் குறித்து என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். அடுத்த 5 வருடங்களுக்கான நிலையான திட்டம் எம்மிடம் உள்ளது.
அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு மக்கள் சிந்தித்து சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். நாம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே முன்னுரிமை அளிப்போம். மாறாக நிறைவேற்றதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கல்ல.
இந்தியாவுடனான தொடர்புகள் மீன்புதுப்பிக்கத்தக்க சக்தி பரிமாற்றம் மற்றும் கல்வி என்பவற்றின் மூலம் புதுப்பிக்கப்படுகின்றன. அதற்கமைய கண்டியில் சென்னை ஐ.ஐ.டி. பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு தீர்மானித்தமைக்கு இந்தியாவுக்கு நன்றி கூறுகின்றோம். இது தவிர குருணாகல், சீதாவாக்கை மற்றும் கொழும்பிலும் மேலும் 3 புதிய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படவுள்ளன. கல்வியை டிஜிட்டல் மயப்படுத்துவதன் ஊடாகவும் எம்மால் வேகமாக வளர்ச்சியடைய முடியும்.
நாம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளோம். அவற்றை வெற்றிகரமாக கடந்துள்ளோம். பரிஸ் கிளப் மற்றும் சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுடன் மறுசீரமைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். அவை நிறைவடைந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் சகல நிபந்தனைகளையும் நிறைவேற்றிவிடுவோம். அதன் மூலம் நெருக்கடிகளிலிருந்து முழுமையாக வெளிவரத் தொடங்கலாம்.
சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகளைப் போன்று நிலையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தி அவற்றை பின்பற்ற வேண்டும். இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவைப் போன்று ஏற்றுமதி சந்தைகளை பரவலாக்கிக்கொள்ள வேண்டும். அதற்கு உற்பத்தி பொருளாதாரத்தில் அதிக அவதானம் செலுத்த வேண்டும்.
நாம் உலகில் சிறிய தீவாகக் காணப்படுகின்ற போதிலும், பிராந்திய பொருளாதாரத்தின் கேந்திரமாகவே உள்ளோம். எனவே தான் எமது துறைமுகங்களை விஸ்தரிக்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
மறுபுறம் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்த வேண்டிய சவாலையும் நாம் எதிர்கொள்ள வேண்டும். 2019ஆம் ஆண்டு 16 சதவீதமாகக் காணப்பட்ட வறுமை நிலை தற்போது 26 வீதமாக உயர்வடைந்துள்ளது. விவசாயத்தை நவீனமயப்படுத்தி உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் ஊடாக இதனைக் குறைக்க முடியும். அதன் அடிப்படையிலேயே சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளோம். அத்தோடு இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளோம்.
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை நாம் முறையாக நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கின்றோம். அவற்றை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதா அல்லது இந்த இடத்திலேயே இருப்பதா அல்லது முன்னோக்கிப் பயணிப்பதா என்ற கேள்வியை மக்கள் முன் வைக்கின்றேன். அவர்களே இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.