ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, டுபாய் கபில என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் 15 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய இந்த சுற்றிவளைப்பில் 13 கிலோ ஹெரோயின், 6 கிலோ கிராம் ஹாஷ், 500 கிராம் கொக்கெய்ன் மற்றும் 15 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றுடன், பணத்தை வைத்திருந்த சந்தேக நபர் மற்றும் பெண் சந்தேக நபர் ஒருவரும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
51 வயதான சந்தேக நபர் ஒருவரும் பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நபர் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதியில் வாடகை வீட்டில் சுமார் 2 வருடங்களாக பாரியளவில் போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதேவேளை, கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி இந்த போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் 1 கிலோ 60 கிராம் ஹெரோயின் மற்றும் 49 இலட்சம் ரூபா பணத்துடன் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.