விசா தொடர்பில் விசனத்தை வெளியிட்ட இளைஞனுக்கு நெருக்கடி கொடுத்தால் விளைவு விபரீதமாக இருக்கும் – நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி

விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை தனி இளைஞர் ஒருவர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

தவறுகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் அதனை விடுத்து இந்த இளைஞனுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தினால் அரசாங்கம் மீண்டும் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

சட்டத்தரணிகளும், நாட்டு மக்களும் ஒன்றிணைவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற பிரிவிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடல் (விசேட ஏற்பாடுகள்)திருத்தச் சட்டமூலம் (பராட்டே) என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது,

 

நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்கள் 52 சதவீதமளவில் பங்களிப்பு செய்கிறார்கள்.தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தொழில் முயற்சியாளர்கள் பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது.ஆனால் அவர்கள் மீதே பொருளாதார நெருக்கடி சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகளினாலும்,ஊழல் மோசடியாலும் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.

 

கொவிட் பெருந்தொற்றினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் கொவிட் பெருந்தொற்றினால் எமது அண்மை நாடுகளான மாலைத்தீவு,பங்களாதேஷ் மற்றும் பூட்டான் உள்ளிட்ட நாடுகள் வங்குரோத்து நிலையடையவில்லை. பொருளாதார மீட்சிக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அரசாங்கம் பேச்சளவில் குறிப்பிடுகிறது.ஆனால் செயலளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

 

வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் சட்டமூலம் தற்காலிகமானதே,07 மாதங்களை வரையறுத்தே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.ஏழு மாத காலத்துக்குள் நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையுமா என்பதை குறிப்பிட முடியாது,ஆகவே தொழில் முயற்சியாளர்களுக்கு 2 ஆண்டுகளேனும் நிவாரணம் வழங்க வேண்டும்.

வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை இளைஞர் ஒருவர் தனித்து வெளிப்படுத்தியுள்ளார். அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை அந்த இளைஞர் பயன்படுத்தியுள்ளார்.இந்த இளைஞன் குறிப்பிட்ட விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி,அதற்கு மக்கள் அவதானம் செலுத்தியதன் பின்னரே அமைச்சரவை பழைய முறைக்கு விசா விநியோகிக்க தீர்மானித்துள்ளது.

 

அரசாங்கம் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் அதனை விடுத்து இந்த இளைஞனுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் சட்டத்தரணிகளும், நாட்டு மக்களும் அந்த இளைஞனுக்கு சார்பாக செயற்படுவார்கள். கடந்த கால நிகழ்வுகளையும் அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *