ஆட்கடத்தல்காரர்கள் சிலர் இணைந்து ரஷ்யாவின் இராணுவ சேவைக்காக இலங்கை இளைஞர்களை அனுப்பும் வியாபாரம் இந்த நாட்களில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வியாபாரத்தில் யாரும் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனத் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
சுற்றுலா வீசா ஊடாக ரஷ்யா இராணுவ சேவையில் இணைந்துகொண்டு பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள சில குடும்பத்தினர் வியாழக்கிழமை (9) அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்குத் தொடர்ந்து தெரிவிக்கையில்.
ரஷ்யா இராணுவத்தில் உயர் சம்பளத்துடன் தொழில் பெற்றுத்தருவதாகத் தெரிவித்து ஓய்வுபெற்ற இராணுவத்தினர் இதற்காக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். என்றாலும் அவர்கள் வென்கர் கூலிப்படையில் சேவைக்காகச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் அங்கு முன்னணி பாதுகாப்பு வலயத்தில் கடமைக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் அவர்களுக்கு பல மாதங்களாக அவர்களுக்குரிய சம்பளமும் வழங்காமல் இருப்பதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி எந்த நபரையும் யுத்த சேவைக்காக வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதில்லை. அதேபோன்று சுற்றுலா விசா ஊடாக தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என எந்தளவு அறிவுறுத்தல் மேற்கொண்டாலும் இவ்வாறு தொழிலுக்குச் சென்று பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.
ஆட்கடத்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டத்தின் பிரகாரம் பணியகத்துக்கு அதிகாரம் இல்லை. இந்த முறைப்பாடுகள் குற்ற விசாரணை திணைக்களத்தினாலேயே விசாரிக்கப்படுகின்றன. அதனால் எந்த சந்தர்ப்பத்திலும் சுற்றுலா விசா ஊடாக தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என இலங்கை மக்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.