புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சி செய்ய ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புத்தரின் போதனைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை இவ்வருடத்தில் ஆரம்பிக்க எதிர்பார்த்தபோதிலும், செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்டங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படாததால், அடுத்த வருடம் வரை அந்தப் பணிகளை ஒத்திவைக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய சட்டங்களை நிறைவேற்றிய பிறகு அடுத்தகட்ட பணிகள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மொரட்டுவை பௌத்த மன்ற மண்டபத்தில் நேற்று (11) நடைபெற்ற மொரட்டுவை இலங்கை பௌத்த சங்கத்தின் 100ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

1924ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி ஆர்தர் வி.தியெஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட மொரட்டுவை இலங்கை பௌத்த சங்கத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மொரட்டுவை பௌத்த மண்டபத்துக்கு 1925ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டது.

இந்தக் கட்டடம் 1929 ஜூன் 24ஆம் திகதி மொரட்டுவை பௌத்தர்களின் பௌத்த தலைமையகமாக, அதை அப்போதைய இலங்கை ஆளுநர் ஹெர்பர்ட் ஜே. ஸ்டென்லி திறந்துவைத்தார். மொரட்டுவை மகா வித்தியாலயத்துக்கான அடிக்கல்லும் அன்றைய தினம் நடப்பட்டது.

நூறு வருடங்களைப் பூர்த்தி செய்யும் மொரட்டுவை பௌத்த மண்டபத்தின் திருத்தப் பணிகள் அரசாங்க செலவில் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று பிற்பகல் மொரட்டுவை பௌத்த விகாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார். மொரட்டுவை பௌத்த சங்கத்தின் 100ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வளாகத்தில் சந்தன மரக்கன்றை நடும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

மொரட்டுவை பௌத்த சங்கத்தின் உப தலைவர் தம்மிக்க சந்திரநாத் பெர்னாண்டோ, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நூற்றாண்டு நினைவுப் பதிப்பை வழங்கிவைத்தார்.

மொரட்டுவை பௌத்த சங்கத்தின் மூத்த உறுப்பினர் ரஞ்சித் கமநாயக்க, உப தலைவர்களான பிரதீப் ஸ்ரீயந்த பெர்னாண்டோ, தம்மிக்க சந்திரநாத் பெர்னாண்டோ, காமினி பெரேரா, பிரதேச செயலாளர் கீர்த்தி பெரேரா ஆகியோர் ஜனாதிபதிக்கு நினைவுப்பரிசை வழங்கினர்.

அதன் பின்னர் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் மொரட்டுவை முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.

மொரட்டுவை மகா வித்தியாலயத்தின் டபிள்யூ.ஏ. இமாஷ சாவிந்திர ஆஷிங்ஷன என்ற மாணவனால் வரையப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உருவப்படத்துடன் கூடிய மொரட்டுவை பௌத்த மண்டபத்தின் படமும் இங்கு வழங்கப்பட்டது.

அதன் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:

”இன்று முழு உலகமும் காலநிலை மாற்றத்தால் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது. இந்நாட்களில் நாம் எதிர்கொள்ளும் கடுமையான சூரிய வெப்பம் நாம் இதுவரை சந்திக்காத ஒரு சூழ்நிலை. இந்தக் காலநிலை வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டிய கடினமான சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது. இத்துடன், கடும் நீர் பிரச்சினையையும் சந்திக்க வேண்டியுள்ளது. பௌத்த தர்மத்தின்படி இந்த சிக்கலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களில் உலகின் முக்கிய பிரச்சினையாக காலநிலை மாற்றத்தால் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மாறும். புத்தரின் போதனைகளின்படி பார்த்தால், நாகரிகத்தின் மீதான பேராசையின் காரணமாகவே நாம் இந்த நிலையை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. அனைவரும் வேகமாக முன்னேற விரும்பினர். வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அதன்படி மனித சமுதாயம் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவித்துள்ளது. எனவே, காலநிலை மாற்றத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதில் நாம் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் உலகம் இன்று விரைவான தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. குறிப்பாக 1945இல் அணுகுண்டு வெடித்தபோது, இனி தொழில்நுட்ப முன்னேற்றம் இருக்காது என்று கருதப்பட்டது. ஆனால் தற்போது அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் பாடசாலையில் படிக்கும்போது கணினி, கையடக்கத் தொலைபேசி எதுவும் இருக்கவில்லை. ஆனால் தற்போது, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், இன்று செயற்கை நுண்ணறிவு வரை சென்றுள்ளோம்.

இப்போது இருப்பது செயற்கை நுண்ணறிவின் ஆரம்பமாகும். அடுத்த இரண்டு தசாப்தங்களில் செயற்கை நுண்ணறிவு எங்கே செல்லும் என்ற கேள்வியை நாம் எதிர்கொள்கிறோம். செயற்கை நுண்ணறிவுக்கும் புத்த மதத்துக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

நம் மனதால் அனைத்தும் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதே புத்தரின் போதனைகள் சுட்டிக்காட்டுகிறது. மனதைக் கட்டுப்படுத்தினால் முன்னேறலாம். மனதைக் கட்டுப்படுத்தாவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை. மனதைக் கட்டுப்படுத்துவது மனிதனுக்கு மட்டுமே உள்ளது. அதனால்தான் புத்தரின் போதனைகள் மனித குலத்திற்காக செய்யப்பட்டது. மனதைக் கட்டுப்படுத்தினால் பேராசையை ஒழிக்க முடியும். இந்த மனித மனதிற்கு இணையாக செயற்கை நுண்ணறிவு தற்போது வந்துவிட்டது. செயற்கை நுண்ணறிவுக்கு பல்வேறு தகவல்களை இணைக்க முடியும். செயற்கை நுண்ணறிவு அதற்கேற்ப செயல்படுகிறது. அப்படியானால், புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு வேறு மதத்தைப் போதிக்குமானால் அது பௌத்தத்திற்கு அச்சுறுத்தலாக அமையும். எனவே, நாம் அது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுர காலத்தில் பௌத்தம் இலங்கைக்கு வந்ததுடன், அதன் பின்னர் பௌத்தம் பல்வேறு அழுத்தங்களைச் சந்தித்தது. இந்து மதம், மஹாயான தர்மம் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் அதில் தாக்கம் செலுத்தியுள்ளன. இக்காலத்தில் செயற்கை நுண்ணறிவும் அதில் இணைகிறது.

அப்படியானால் செயற்கை நுண்ணறிவு வேறு ஒரு தர்மத்தைப் போதிக்குமா என்று சிந்திக்க வேண்டும். மக்கள் தங்கள் கையில் இருக்கும் கைபேசியுடன் தர்மத்தை இணைத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சிந்திக்க வேண்டும். இது பௌத்தம் மட்டுமன்றி ஏனைய மதத்தினரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக மாறியுள்ளது.

எனவே, செயற்கை நுண்ணறிவை கட்டுப்படுத்தவும் புதிய சட்டவிதிகளை நாம் கொண்டு வருகிறோம். தொழில்நுட்ப மேம்பாட்டு சட்ட வரைவை தொழில்நுட்ப அமைச்சு தயாரித்துள்ளதுடன், அதன் கீழ் செயற்கை நுண்ணறிவு மையம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே செயற்கை நுண்ணறிவை நிர்வகிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. நாமும் அதையே செய்ய வேண்டும்.

மேலும், புத்தரின் போதனைக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சியைத் தொடங்க அடுத்த ஆண்டு ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதை இந்த ஆண்டு நிறைவேற்ற எதிர்பார்க்கப்பட்டாலும், செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இன்னும் நிறைவேற்றப்படாததால், அடுத்த ஆண்டுக்கு அது ஒத்திவைக்கப்பட்டது. அதற்கேற்ப புதிய சட்டங்களை முன்வைத்து அந்த செயற்பாடுகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மொரட்டுவெல்ல தம்ம நிகேதன சர்வதேச பௌத்த நிலையத்தின் தலைவர் அமரபுர கல்யாணிவங்சிக ஸ்ரீ சத்தம்ம யுக்திக நிகாயவின் மகாநாயக்க வண. மாகால்லே நாகித தேரர், பாணந்துறை சங்க சபையின் நீதித்துறை சங்க நாயக்க கொரலவெல்ல வாழுகாராம மகா விஹாராதிபதி வண. நெகின்னே ஆரியஞான தேரர், மொரட்டுவ ஒழுக்காற்று அதிகார சபையின் தலைவர், மொரட்டுவ, இந்திபெத்த ஸ்ரீ சுதர்ம ரத்னாராம விகாராதிபதி வண. கம்பளை சுகுணதஜ தேரர், மொரட்டுவ ஹொரேதுடுவ புரான சங்கிகாரமயவின் விகாராதிபதி, அங்குலானே ஞானவிமல பௌத்த நிலையத்தின் தலைவர் வண. உடுகம விமலகித்தி தேரர் உட்பட மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத்தலைவர்கள், மொரட்டுவ இலங்கை பௌத்த சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *