முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்ததற்காகவும் கைது – மூதூரில் 4 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடித்து மூதூர் நீதிவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (13) உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவை  நீதிபதி தஸ்னீம் பௌசான் வழங்கியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நான்கு பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணிக்கு பின்னர் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவி உட்பட 3 பெண்களும் ஆண் ஒருவரும் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மறுநாள் (13) திங்கட்கிழமை மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே விளக்கமறியல் நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய குற்றச்சாட்டின் கீழ் சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40), சமூக செயற்பாட்டாளர் செல்வவினோத்குமார் சுஜானி (வயது 40), தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முன்னாள் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43) ஆகியோரும் பொலிசாரை தாக்கிய குற்றச்சாட்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெளிவாகியுள்ள கலைப்பிரிவு  மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22), ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் மீது ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த கைது நடவடிக்கையின் போது பல்கலைக்கழக மாணவியின் தாயாரான கமலேஸ்வரன் விஜிதா என்பவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மகளான தேமிலா தனது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாகவும் அதனை தடுக்க முயற்சித்த பெண் பொலிஸாருக்கு கத்தி வெட்டி காயம் ஏற்பட்டதால் பல்கலைக்கழக மாணவியும் கைது செய்யப்பட்டிருந்தார்.

காயத்துக்கு உள்ளான பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகின்றது.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை சேனையூர் புவனகணபதி ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்பூர் பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து குறித்த நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிய நிலையில் அதில் ஈடுபட்டிருந்தவர்கள் தடை உத்தரவை வாங்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுத்ததாகவும் தெரிய வருகின்றது. இந்நிலையிலேயே குறித்த கைது சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *