முக புத்தகத்தை நம்பி ஏமாற்றமடையும் தரப்பினர் இன்றும் உள்ளார்கள். ரஷ்யாவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் மோசடிகளுக்கு அகப்பட வேண்டாம் என மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
ரஷ்ய யுத்தக் களத்தில் உயிரிழந்த இலங்கையர்களின் உடல்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மிகுதியாக உள்ளவர்களை நாட்டுக்கு அழைத்து வர இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது ரஷ்ய யுத்தகளத்தில் நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
ரஷ்ய யுத்தகளத்துக்கு சென்றுள்ள இலங்கையர்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்ட ஒருசில விடயங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, காமினி வலேபொட ஆகியோரை ஜனாதிபதி அழைத்திருந்தார். இவ்விருவரும் பங்குப்பற்றியிருந்தார்கள்.
ரஷ்யாவுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக சென்று யுத்த களத்தில் விடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் இவ்விருவரும் பல விடயங்களை பாதுகாப்பு சபை கூட்டத்தில் முன்வைத்தார்கள்.
இச்சந்தர்ப்பத்தில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி,பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.இதற்கமை ஓரிருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
எவ்வளவு ஆலோசனைகள் வழங்கினாலும் முக புத்தகத்தில் (பேஸ்புக்) வெளியாகும் போலியான விளம்பரங்களுக்கு ஏமாறும் ஒரு தரப்பினர் உள்ளார்கள்.
ரஷ்யாவின் சென் பீற்றர் நகரத்தில் காணி வழங்கப்படுவதாகவும், குடும்பத்தாருக்கு விசா மற்றும் 10 இலட்சம் ரூபா வழங்கப்படுவதாகவும் முக புத்தகத்தில் விளம்பரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
போலியான வாக்குறுதிகளை நம்பி இலங்கையர்கள் ரஷ்யாவுக்கு சென்று நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். ஆகவே போலியான விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம் என்று நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
ரஷ்யாவுக்கு இலங்கையர்களை அனுப்பும் மனித கடத்தல் மோசடியில் ஓய்வுப் பெற்ற இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.ரஷ்ய யுத்தக் களத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மிகுதியாக உள்ளவர்களை நாட்டுக்கு அழைத்து வர இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.