தமிழருக்கு எதிரான இன அழிப்பையும், மறைக்கப்பட்ட தமிழரின் வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையிலாக ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் இவ்வருடம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியவர்களை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதை தடுத்து நிறுத்தும் நோக்குடன் நீதிமன்ற தடை உத்தரவையும் பெற்றுள்ளனர்.
எனவே நோய் பரவும் ஆபத்து என தெரிவித்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தினை தடுத்த இலங்கை பொலிஸார் இதே காரணத்திற்காக வெசாக் தன்சல்களை தடை செய்யுமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுப்பார்களா என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுமக்களின் உயிரிழப்பிற்கு அரசாங்கம் காரணமில்லை என காண்பித்து வரலாற்றை அழிப்பதும் மறைப்பதுமே நினைவேந்தல்களை தடுப்பதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஒன்றுகூடுவதன் மூலமும் உணவை பரிமாறிக்கொள்வதன் மூலமும் நோய் பரவும் என்பதாலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், ஏன் மே தினக்கூட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களை கேட்டுக்கொள்ளவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் வெசாக் தன்சல்களையும் தேர்தல் பிரச்சார பேரணிகளையும் தடைசெய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களிடம் வேண்டுகோள் விடுப்பார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்கட்சிகள் இதற்கு எதிராக குரல்கொடுப்பார்களா..? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.