ரஷ்ய யுத்த களத்துக்கு இலங்கையர்களை சட்டவிரோதமாக அனுப்பப்படும் இலங்கையர்கள் – பின்னணியில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் ..?

ரஷ்ய யுத்த களத்துக்கு இலங்கையர்களை சட்டவிரோதமான முறையில் அனுப்பும் மோசடியின் பின்னணியில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் தொடர்புப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது.

ரஷ்ய யுத்த களத்தில் 74 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். ஆகவே இவ்விடயம் தொடர்பில் உடன் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என எதிரணியின் சுயாதீன உறுப்பினர் காமினி வலேபொட சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (12) இடம்பெற்ற அமர்வில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ரஷ்யாவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு ஓய்வு பெற்ற இராணுவத்தினரை ரஷ்ய இராணுவத்தில் இணைக்கும் மோசடிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

ரஷ்ய யுத்தக் களத்தில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் எம்மை தொடர்புக் கொண்டு அழுது புலம்புகிறார்கள்.யுத்தக் களத்துக்கு செல்வதை தாங்கள் அறியவில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.

ரஷ்ய யுத்தக் களத்தில் காயமடைந்துள்ள இலங்கையர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படுவதில்லை.14 நாட்களாக ஒரே ஆடையுடன் அவர்கள் யுத்தகளத்தில் இருப்பதாக அறிய முடிகிறது.

ஓய்வு பெற்ற இராணுவத்தினர் பாரிய இன்னல்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.இவ்விடயம் தொடர்பில் இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்ட போது, இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் சென்றுள்ளார்கள் ஆகவே எமக்கு தலையிட முடியாது என்று தூதரகம் குறிப்பிடுகிறது. இவ்விவகாரத்தை மனிதாபிமான முறையில் ஆராய வேண்டும்.

தனக்கு அதிகாரம் கிடைத்தால் இலங்கையர்களை ஒரு நாள் அல்லது ஒரு வாரத்துக்குள் அழைத்து வருவதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இந்த மோசடியின் பின்னணியில் இவர் உள்ளாரா? என்ற சந்தேகம் எழுகிறது.600 இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ரஷ்ய யுத்தக் களத்தில் இதுவரை 74 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதுடன்,சுமார் 50 இலங்கையர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான யுத்தம் தற்போது தீவிரமடைந்துள்ளது.ஆகவே இந்த நாடுகளின் யுத்தக் களத்துக்கும் இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கப்படலாம்.

ஆகவே ரஷ்ய விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவுக்குழுவை அமைத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *