காணாமலாக்குதலில் பாதுகாப்புப் படையினரும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம்

வலிந்து காணாமலாக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வெளியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கண்டறியப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமலாக்குதலில் பாதுகாப்புப் படையினரும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், அதற்காக பொதுமன்னிப்புக் கோரப்பட வேண்டுமெனவும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களையும் ஒருபோதும் மறந்துவிட முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் அவர்களின் உறவுகளும் நீண்ட காலமாகக் காத்திருப்பதாகவும், உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆயுத மோதல்கள் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், ஆரம்பகட்ட வலிந்து காணாமலாக்கப்படுதல்கள் இடம்பெற்று பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையிலும், இலங்கை அதிகாரிகள் உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த இன்றுவரை தவறியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *