வடமாகாணத்தில் 400 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தெரிவில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள் மே 25 இல் யாழ் மத்திய கல்லூரியில் வைத்து வடமாகாண ஆளுநர் சார்ள்ஸின் தலைமையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது. இதுவரை ஆசிரியர்களுக்கான நியமனங்கள் அரசியல் நியமனங்களாக ஆளும் கட்சியினூடாக அவர்களின் பரிந்துரையின் பின்னணியில் இடம்பெற்று வந்ததே பெரும்பாலும் வடக்கில் மட்டுமல்ல இலங்கை முழுதுமே நடந்தேறியுள்ளது. ஆளுந்தரப்பு எம்பிக்களின் விசுவாசிகளுக்கும் – அல்லது அவர்களுக்கு ஒரு தொகை பணத்தை கொடுத்தோ இந்த வேலை வாய்ப்புகளை கையகப்படுத்தும் நிலை நீடித்தது. மேலும் தேசிய கட்சிகள் தமது வாக்கு வங்கியை தக்க வைக்க இந்த அரச நியமனங்களை தொடர்ந்தும் வழங்கி வந்துள்ளனர். இதிலும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் வழங்கிய 50000 பட்டதாரிகள் நியமனம் எல்லாமே இதே வகையறா தான். ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவை கூட அரச ஊழியர்களின் அதிகரித்த தொகையையும் – அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் தொடர்பிலும் அதீத கரிசனை வெளியிட்டருந்தது. இந்த பின்னணியிலேயே ஐ.எம்.எப் அரச ஊழியர்களாக புதிதாக நியமிக்கப்படுவோர் தொகையை கட்டுப்படுத்துமாறு கூறியதும் நினைவில் கொள்ளத்தக்கது.
இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…!