ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் தீர்மானத்துடன் இணைந்து செயற்பட தயார் – ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் தீர்மானத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக தமிழ் தேசிய சக்திகளுடன் இணைந்து செயற்பட ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.

முன்னணியின் தலைவர் த.சித்தார்த்தனின் தலைமையில் நேற்று (04) நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏனைய அங்கத்துவக் கட்சிகளுடன் இணைந்து ஏற்றுக்கொண்டதுடன், அதனை முன்கொண்டு செல்வதற்கான முழு ஆதரவினையும் வெளிப்படுத்தியிருந்ததாக அந்த கட்சி வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் சமூக வாழ்வின் எதிர்பார்ப்புகளையும் நாளாந்தம் முகம் கொடுத்து வரும் நெருக்கடிகளையும் தென்னிலங்கை அரசியல் சமூகத்தின் தொடர்ச்சியான ஏமாற்றுத்தனங்களையும் உறுதியாக வெளிப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இத் தீர்மானமானது ஒரு சில அரசியல் கட்சிகளினதும், ஒரு சில சமூக செயற்பாட்டுக் குழுக்களினதும் தீர்மானமாக அன்றி, தமிழ் தேசியப் பரப்பில் இயங்கும் அனைத்துத் தரப்பினரதும் ஏகோபித்த கோரிக்கையாக முன்னெடுக்கப்படுவது அவசியம் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனை தமது கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொண்டதுடன், அதனை முன்கொண்டு செல்வதற்கும், அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தரப்பிலிருந்து பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் தீர்மானத்தை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் ஆதரித்துள்ளதாக கட்சியின் தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முன்தினம் (03) இடம்பெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு கூட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

 

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் , பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியன ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *