வடக்கில் பயன்பாடு குறைந்து காணப்படும் களஞ்சியசாலைகளை தனியாரிடம் வழங்கி அவற்றை மேம்படுத்த வேண்டும் – வடக்கு ஆளுநர் சார்ள்ஸ்

கடல்வழி போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், வட மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகள், புனரமைக்கப்பட வேண்டிய வீதிகள் , எதிர்கால திட்ட முன்மொழிவுகள், ரயில் போக்குவரத்து, கடல்வழி போக்குவரத்துச் செயற்பாடுகள், வடக்கு மாகாண போக்குவரத்துத் துறையில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.

தீவுகளுக்கான பயணிகள் போக்குவரத்திற்குரிய படகுச் சேவை விஸ்தரிக்கப்பட வேண்டும் எனவும், இறங்குத் துறைகள் புனரமைக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் இதன்போது கூறினார். பஸ் பயணிகள் நாளாந்தம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் இந்த கூட்டத்தின் போது கௌரவ ஆளுநர் எடுத்துரைத்தார்.

ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் அரச மற்றும் தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆளுநர் கூறியதற்கு அமைய அதற்கான உரிய செயற்பாடுகளை அமுல்படுத்துமாறு மத்திய அமைச்சின் துறைசார் அதிகாரியால், மாகாண அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளுக்கான சமிஞ்சைக் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், யாழ் மற்றும் காங்கேசன்துறை ரயில் நிலையங்களுக்கு அருகில் போக்குவரத்து முனையங்களை நிறுவுதல் போன்ற விடயங்கள் குறித்தும் ஆளுநர் தனது ஆலோசனைகளை முன்வைத்தார்.

வடக்கு மாகாணத்திலுள்ள ரயில் நிலையங்களுக்கு அருகில் காணப்படும் பொருள் களஞ்சியசாலைகளை உரியவாறு பயன்படுத்த வேண்டும் எனவும், பயன்பாடு குறைந்து காணப்படும் களஞ்சியசாலைகளை தனியாரிடம் வழங்கி அவற்றை மேம்படுத்த வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்திருந்தார்.

போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதனூடாக பொருளாதார அபிவிருத்திகளை அடைய முடியும் எனவும், சுற்றுலாத்துறைசார் விடயங்களை மையப்படுத்தி போக்குவரத்து சேவை விஸ்தரிக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் கூறினார்.

வடக்கு மாகாணத்தில் போக்குவரத்துத் துறையை விஸ்தரிப்பது தொடர்பில் கேட்டறிந்துக்கொண்ட மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், கடல்வழி போக்குவரத்தின் அவசியம் மற்றும் தேவை தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அத்துடன் அத்துடன் எதிர்வரும் ஒன்றரை மாதங்களுக்குள் தண்டவாள புனரமைப்பு நிறைவு செய்யப்பட்டு, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான நேரடி ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *