நாளை சனிக்கிழமை மேல் மாகாணசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் 17 கட்சிகளும், 13 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. கம்பஹா மாவட்டத்தில் 11 கட்சிகளும், 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதோடு களுத்துறை மாவட்டத்தில் 10 கட்சிகளும், 6 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.
நாளை காலை 7.00மணி முதல் 4.00மணிவரை வாக்களிப்பு நடைபெறும். வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தேசம்நெற் க்குத் தெரிவித்தது. 319 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ண ப்படவுள்ளதோடு தபால் மூல வாக்குகள் எண்ணுவதற்கு 19 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேல்மாகாணசபையின் கொழும்பு மாவட்டம் பொதுவாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு சார்புடைய மாவட்டமாகவே இருந்துவருகின்றது. இந்தத் தேர்தலில் இலங்கையில் தற்போது நடைபெறும் யுத்தம் தென்பகுதி மக்களின் மனோநிலை எப்படிப்பட்டதென்பதை வெளிப்படுத்துவதாக அமையலாமென கருதப்படுகின்றது. தேர்தல் பிரசார காலங்களில் சில அடாவடித்தனங்களும் தேர்தல் விதிமுறை மீறல்கள் நடைபெற்றன. ஆனால், நாளையதினம் தேர்தல் நேரத்தில் தேர்தல் வன்முறைகள் இடம்பெறாதுவிடின் மக்களின் மனோநிலையை அளவிடக்கூடிய ஒரு அளவுகோலாக இத்தேர்தல் அமையலாமென தேர்தல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வடமாகாணத்தில் இடம்பெற்றுவரும் யுத்த நிலையின் தென்பகுதி மக்களின் கருத்துக் கணிப்பாகவும் இத்தேர்தலைக் கொள்ள முடியுமென இவர்கள் கருதுகின்றனர். எவ்வாறாயினும் தேர்தல் நடைபெறும் முறையைப் பொறுத்தே இக்கருத்துக் கணிப்பை அளவிடலாம் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேல்மாகாண தேர்தல் கடமைகளில் 43 ஆயிரம் அரச ஊழியர்கள் – தேர்தல்கள் செயலகம் தகவல்
மேல்மாகான சபைத் தேர்தல் கடமைகளுக்காக 43 ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 12, 180 அரச ஊழியர்கள் தேர்தல் மத்திய நிலையங்களில் கடமையாற்றவுள்ளனர். இதுதவிர வாக்கு எண்ணும் நிலையங்களில் 8,000 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கம்பஹா மாவட்ட தேர்தல் கடமைகளுக்காக 12, 000 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு வாக்கு எண்ணும் பணிகளுக்காக 1,500 பேர் பணியாற்றவுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் 10,000 ஊழியர்கள் சேவையாற்றவுள்ளனர். இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளுக்காக 2,500 வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.