கடந்த காலத்திலிருந்து நாம் அனைவரும் பாடம் கற்க வேண்டும் என்றும், கடந்த காலத்தில் இனிப்பும் கசப்பும் இருப்பதாகவும், சாதி, மதம், குலம், கோத்திரம், கட்சிப் பிரிவினைகளில் இருந்தும் விலகி, ஒரு நாட்டு மக்களாக ஒன்றிணைய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த காலத்திலிருந்து பாடம் கற்று, அது இனிப்பாக இருந்தாலும் கசப்பாக இருந்தாலும் கடந்த காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்காமல், புதிய பயணத்தை மேற்கொள்ள ஒன்றிணையுமாறும், மற்ற அரசியல்வாதிகளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சியாக இருந்து நாட்டிற்காக உழைத்த தன்னை நம்புமாறும், இதுவரை மாற்றாந்தாய் அரவணைப்பைப் பெற்றுள்ள வடக்கு, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களுக்கான விடியலுக்கு ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியின் புதல்வனாக தான் வாக்குறுதி அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (10) யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, அளவெட்டி அருணோதயம் வித்தியாலயத்துக்கு பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தின் 230 ஆவது கட்டத்தின் கீழ் 1,177,000 ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறையை அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டே இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி வரலாற்றில் ஒரு புதிய பயணமும், புதிய புரட்சியும், திருப்புமுனையுடன் ஆரம்பிக்கப்படும் எனவும், உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட மக்களின் அபிவிருத்தியை நடைமுறைப்படுத்தத் தேவையான பலத்தை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன், யாழ். மாவட்ட மட்டத்தில் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் கைத்தொழில் குடியேற்றங்கள் நிறுவப்பட்டு, ஒவ்வொரு பிரதேச செயலக எல்லையிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, யாழ். மாவட்டம் அபிவிருத்தி மையமாகவும் அறிவு மையமாகவும் மற்றும் அறிஞர்கள், புத்திஜீவிகள் மையமாகவும் மாற்றப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.