பௌத்த மதத்தின் இருப்புக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும் எனபது சர்வதேச பெண்கள் அமைப்புகளின் அனைத்து உடன்படிக்கைகளிலும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை அல்லது எந்தவொரு நிறுவனமும் அந்த நடவடிக்கைகளில் தலையிட முடியாது என்று வலியுறுத்தினார்.

ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கும் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், பௌத்த மதத்தின் இருப்புக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய மறுசீரமைப்பின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள பிராந்திய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (18) சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட புதிய பிராந்திய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வில் இன்று கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆண், பெண் சமத்துவச் சட்டமூலம் குறித்து பாராளுமன்றத்தில் இன்று நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. ஆனால் அதுதொடர்பில் கிடைத்துள்ள உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி பெண்களுக்கு சம உரிமை இல்லை. நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையான பெண்களால் அந்த உரிமையைப் பெற முடியாது என்பது, இந்த நாட்டின் பாராளுமன்றத்திற்கும் அரசியலமைப்பிற்கும் எதிரான தீர்மானமாகவே கருத முடியும் என நான் பாராளுமன்றத்தில் தெரிவித்தேன்.

ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம். சர்வதேச பெண்கள் அமைப்புகளின் அனைத்து ஒப்பந்தங்களிலும் இது சேர்க்கப்பட்டுள்ளது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை அல்லது வேறு எந்த அமைப்பும் தலையிட முடியாது.

அந்தப் பணியை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளோம். எனவே இது தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என இன்று நான் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தேன். அதேபோன்று, அந்தத் தீர்மானத்தினால் பௌத்த மதத்தின் பாதுகாப்பு நீக்கப்படலாம் என்பதால் அந்தக் கருத்தை ஏற்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது நாம் அதுகுறித்து அவதானம் செலுத்தி செயற்பட்டு வருகிறோம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *