வசூல் ‘துவாரகா புரஜக்ற்’றை சுவிஸின் தேசியத் தொலைக்காட்சியான SRF “தமிழ்ப்புலிகளின் நன்கொடை ஊழல் : புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கிறாரா?” என்ற தலைப்பில் ஆவணப்படமாக வெளியிட்டது. சில தினங்களுக்கு முன் யூன் 19, 2024 அன்று ஒளிபரப்பப்பட்ட 14 நிமிடங்கள் ஏழு விநாடிகள் நீண்ட இந்த ஆவணப்படத்தில் வசூல் ‘துவாரகா புரஜக்ற்’றின் முக்கிய புள்ளிகள் மற்றும் துவாரகாவாகத் தோண்றுவதாக சொல்லப்படும் பெண்ணுடனான உரையாடல்கள் மற்றும் இவர்களை கேள்விக்கு உட்படுத்தும் பணத்தை இழந்து சிலரின் பதிவுகளும் ஒளிபரப்பப்பட்டது. தேசம்நெற் உட்பட தமிழ் சமூக வலைத்தளங்களில் நன்கு அலசி அம்பலப்படுத்தப்பட்ட வசூல் ‘துவாரகா புரஜக்ற்’றை தற்போது ஐரோப்பிய நாடொன்றின் தேசியத் தொலைக்காட்சியும் அம்பலப்படுத்தியிருப்பது இந்த மோசடியின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
சுவிஸில் உள்ள உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (World Tamil Coordination Committee – WTCC) தலைவர் அப்துல்லா என்று அறியப்பட்ட ஜெயபாலன் செல்லையாவின் இயக்கத்தில் உருவான வசூல் ‘துவாரகா புரஜக்ற்’றின் ஊடகத்துறைப் பொறுப்பாளர் அவுஸ்ரேலியாவில் இருந்து ஒளிபரப்பாகும் இன்பத் தமிழ் வானொலியின் இயக்குநர் பாலசிங்கம் பிரபாகரன். காலம் சென்ற மதியுரைஞர் அன்ரன் பாலசிகத்துக்கு எடுத்துக் கொடுத்த உதவியாளர் சேரமான் என்று அறியப்பட்ட சிறிஸ்கந்தராஜா ஐஸ்வர்ரஞ்சித வசூல் ‘துவாரகா புரஜக்ற்’றின் மதியுரைஞர். சுவிஸ் SRF தொலைக்காட்சி அம்பலப்படுத்திய புரஜக்ற் எப்படி தங்களுக்கு சாதகமாக அமைந்தது என்று 37 நிமிட காணொளியை வெளியிட்டு தங்களது மீசையில் மண்படவில்லை என சேராமான் ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றனர்.
SRF இவ் ஆவணப்படம் சுவிஸில் வாழும் முன்னாள் தமிழீழப் போராளிகள் எனக் கூறிக்கொள்பவர்கள், உயிருடன் வந்துள்ள புலிகள் தலைவருக்காக எனக் கூறி பெருந்தொகையான நிதித் திரட்டல் மோசடிகளில் ஈடுபடுவதாக இந்த ஆவணப்படம் குற்றம் சாட்டப்படுகின்றது. புலிகள் அமைப்பானது 15 வருடங்களுக்கு முன்னரே வெற்றி கொள்ளப்பட்டு துடைத்தழித்தொழிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் புலிகள் இலங்கையில் தமிழர்களாக ஒரு கடுமையான இரத்தம் தோய்ந்த யுத்தத்தை நடாத்தியது என்றும் இறுதியில் புலிகள் அமைப்பின் தலைவர் மற்றும் அவரது குடும்பம் உட்பட கொல்லப்பட்டதோடு அந்தப் பிரிவினைக்கான யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் இந்த நிதி மோசடி உண்மையிலேயே புலிகள் அமைப்பு அழிந்துவிட்டதா? என்ற ஐயப்பாடான கேள்வியை எழுப்பி உள்ளதாக SRF ஆவணப்படத்தில் கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் தற்போதைய SRF பின் ஆய்வில் ஒரு மோசடியான பெண் என்று கருதப்படுகிறவரோடு இணைந்து சுவிஸில் தமிழ்ப் புலிகள் செயற்பாடுகள் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது எனத் தெரிவிக்கின்றது.
அவ்ஆவணப்படம் மேலும் சுட்டிக்காட்டியுள்ள விடயங்கள்: “2009இல் முடிவடைந்த யுத்தம் சுவிஸ்லில் வாழும் தமிழர்களால் பொருளாதார ரீதியாக அனுசரனை வழங்கப்பட்டது. எப்படியிருந்த போதும் இப்போதும் கூட சுவிஸ்லில் வாழும் தமிழர்கள் தனி நாட்டை கோருகிறார்கள்.
ஒரு சிலர் புலிகள் தலைவரான பிரபாகரன் இறப்பு தொடர்பில் சந்தேகம் கொள்கின்றனர். அவர் உயிருடன் இருப்பதாக நம்புகின்றனர். சுவிஸில் ஒரு நினைவிடத்தில் மே 18 இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். அந்த நினைவிடத்தில் நின்று கொண்டு பிரபாகரன் உயிருடன் இருப்பதாக 100 வீதம் நம்புவதா கூறுகின்றனர். அது மட்டுமல்ல அதற்கு “ஆதாரமும் உண்டு. நான் நம்புகிறேன் பிரபாகரன் மகளும் உயிருடன் இருக்கிறார்” என்கிறார்கள்.
2023 பிரபாகரன் மகள் என்று கருதப்படுகிற ஒரு பெண் மாவீரர் தினத்தில் ஆற்றிய உரையை எங்கும் பகிருகிறார்கள். அந்த உரையில் வசதிபடைத்த தமிழர்கள் தாயகத்தில் வாழுபவர்களின் வறுமையை போக்க முன்வர வேண்டும் மற்றும் தன்னலமற்று போராடியவர்களை கருத்தில் கொண்டு புதிய தலைமையான தேசத்தின் புதல்வி பிரபாகரன் மகள் துவாராகாவின் தலைமையிலான வழிநடத்தில் நடக்கப்போகிற போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனை நம்பிய பல சுவிஸ் வாழ் தமிழர்கள் அடுத்த கட்ட போராட்டத்திற்கு பெருந்த தொகையான பணத்தை கொடுத்துள்ளார்கள். கிட்டத்தட்ட 3 இலட்சத்து எண்பதினாயிரம் பிராங்குகள். அவ்வாறு பணம் கொடுத்தவர்களை இவ்வாறு நம்ப வைத்துள்ளார்கள். “பிரபாகரனும் அவரது குடும்பமும் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் அவருடைய மனைவி, மகள், அவருடன் சேர்ந்து 16 நபர்கள் மற்றும் அவர் சமையல்காரர் உட்பட.”
SRF இன் ஆவணப்படத்தில் மேலும் கூறியதாவது “துவாரகா என வீடியோவில் தோன்றிய பெண் பல வருடங்களாக சுவிஸில் வாழ்ந்தவர். பல பேரிடம் ஏமாற்றி நிதி திரட்டி மோசடியில் ஈடுபட்டவர். பல தமிழர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றவர்” என்றும் அந்த ஆவணப்படம் சுட்டிக்காட்டியது. SRF, அந்தப் பெண்ணின் இருப்பிடத்தை அறிந்து, அவர் பல வருடங்களாக ஏமாற்றி சேகரித்த நூற்றுக்கணக்கான பிராங்குகள் தொடர்பில் விசாரித்தனர். துவாராகா என்று கருதப்படும் அப்பெண் வீடியோவில் முகம் காட்டவும் தனது பெயரை வெளிப்படையாக கூறவும் மறுத்தார். அப்பெண் தன் மீதான அத்தனை குற்றச் சாட்டுக்களையும் மறுக்கின்றார்.
அதனால் அந்தப் பெண்ணை அதிதி என்ற புனை பெயரால் அழைக்கும் SRF குறிப்பிட்ட பெண்ணின் படத்தையும் மாவீரர் உரை வீடியோவில் தோன்றிய பெண்ணின் படத்தையும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செய்த ஒப்பீட்டு ஆய்வு 95 வீதம் இரு புகைப்படங்களிலும் தோன்றும் நபர்கள் ஒரே நபராக இருக்கவே வாய்ப்புள்ளதாக கூறுகிறது. மற்றும் அப்பெண் உரையாடிய உரையாடல் பதிவுகளும் ஆதாரங்களாக காட்டப்படுகிறது. அதிதி என்று அழைக்கப்படும் அப்பெண்ணை நேரில் பார்த்தவர்களும் துவாரகாவும் ஒரே நபர் எனக் கூறுகின்றனர்.
அதேநேரம் அதிதி இக்குற்றச்சாட்டுக்களை மறுப்பதோடு இல்லாமல் தனது பெயரை கெடுப்பதற்கான ஒரு சதித்திட்டம் என்கிறார். இப் பெண்ணிடம் பணத்தை இழந்தவர்கள் மறுபக்கம் அப்பெண்ணுக்கு எதிராக வழக்குத் தொடுக்கவும் முற்பட்டுள்ளனர்.
இவை இப்படி இருக்க இந்தப் பெண்மணியின் பின்னால் இயங்கும் குழு யார்? என்ற தேடலிற்கு கிடைத்த விடை: சம்பந்தப்பட்ட மாவீரர் உரையை யூரியூப்பில் பதிவேற்றிய நபர் யாரெனில் சுவிஸில் பண சேகரிப்பில் ஈடுபட்ட புலிகளின் முன்னாள் தலைவரான அப்துல்லா எனும் நபர் என கண்டறியப்பட்டது.
2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கு சுவிஸிலிருந்து 15 மில்லியன் பிராங்குகள் அனுப்பி வைத்ததாக குற்றச்சாட்பட்டவர் அப்துல்லா. அவர் உட்பட 2009 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் மோசடியான ஆவணங்களை வங்கிகளில் சமர்ப்பித்து பல நூறாயிரம் பிராங்குகள் கடன் பெற்று, பயங்கரவாத அமைப்பு என பல நாடுகளில் அறிவிக்கப்பட்ட புலிகள் அமைப்புக்கு நிதிப்பங்களிப்பு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார்கள். 2018 இல் ஆச்சரியமான வகையில் புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல, அடிப்படையில் அவர்கள் அனைவரும் மீதான வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் அவ்ஆவணப்படம் தெரிவித்திருந்தது. அப்துல்லா மட்டும் மோசடிக்காக இரண்டு வருடங்கள் அவர் தன்னுடைய நன்னநடத்தையை காட்டும் காலமாக குறைக்கப்பட்டது.
இந்த துவாராகா பண மோசடி விவகாரம் தொடர்பாக உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளரான அப்துல்லாவிடம் கேட்ட போது அப்துல்லா கூறியதாவது மாவீரர் தின உரையில் தோன்றியவரே துவாரகா எனவும் யுத்தம் முடிந்து 14 வருடங்களாக இலங்கைக்கு தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வில்லை என ஆதங்கப்படும் அவர் அதற்காக துவாராகவுடன் இணைந்து செயற்படுவதை ஏற்றுக் கொள்கிறார்.
அதேநேரம் புலிகளின் மீளெழுச்சிக்கு அடுத்த கட்ட போராட்டத்திற்கான நிதி திரட்டலில் ஈடுபடுகிறீர்களா என்ற கேள்விக்கு, நாங்கள் இதுவரை யாரிடமும் பணம் கேட்கவில்லையென மறுக்கிறார். ஆனால் SRF தொலைக்காட்சி அப்துல்லா தொலைபேசியூடாக ஒரு தமிழரிடம் நிதி சேகரிப்பில் ஈடுபடும் உரையாடல்ப் பதிவை ஆதாரமாக வெளியிட்டுள்ளது. அப்துல்லா தான் நிதி சேகரிப்பில் ஈடுபடவில்லை என மறுத்த போதும் அப்துல்லாவை நன்கு அறிந்த தமிழர்கள் அப்துல்லாவின் குரல்ப்பதிவை கேட்டு அக்குரல் அப்துல்லாவினுடையது என உறுதிப்படுத்துகின்றனர்.
அப்துல்லாவுடன் இணைந்து பல வருடங்கள் செயற்பட்ட முன்னாள் சுவிஸ் புலி உறுப்பினரும் 2009 ஆண்டு இடம்பெற்ற நிதி மோசடிக் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் அப்துல்லாவுடன் இணைந்து விடுதலை செய்யப்பட்ட குலம், அப்துல்லா குழுவின் தற்போதைய நடவடிக்கைகளை கண்டிக்கின்றார். தன்னால் பிரபாகரன் இறக்கவில்லை என்று அப்துல்லா குழு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்கின்றார். மேலும் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருக்கும் போது, மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்து கண்டிக்கத்தக்கது என்கிறார். இவ்வாறான நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் குடும்பங்களிலும் பிரச்சினைகளை கொண்டுவரும் எனக் கூறும் அவர், அப்துல்லா குழுவின் போருக்கான நிதி சேகரிப்பிற்கு வலுவான ஆதாரங்கள் இருக்குமானால் சுவிஸ் அரசாங்கம் சட்டப்படியாக நடவடிக்கை எடுத்து, இப்படியான மோசடிகளை தடுக்க வேண்டும் என்கிறார்.
சுவிஸ் நாட்டைப் பொறுத்தவரை இவ்விவகாரம் அங்கு வாழும் தமிழர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. மற்றும் முன்னாள் புலி உறுப்பினர்களையும் விசனமடைய செய்துள்ளது. பிரபாகரன் பெயரை பயன்படுத்தி நிதி சேகரிப்பில் ஈடுபடுவதை கண்டிக்கின்றனர். மீண்டும் ஒரு யுத்தம் இலங்கையில் ஏற்படுவதை கடுமையாக எதிர்க்கவும் செய்கின்றனர்.
மாறாக SRF இன் ஆவணப்படத்தில் தோன்றும் சேரமான் மற்றும் அப்துல்லா குழுவினர் மீண்டும் தமிழர்கள் தமது ஆயுத பலத்தை கட்டியெழுப்பி பலத்தோடு சர்வதேசத்தின் ஆதரவுடன் தமிழர்களின் போராட்டம் வெற்றியளிக்கும் என்கின்றனர்.
மே 18 இல் சுவிஸில் மாவீர்ர் நினைவு இடத்தில் கூடிய அப்துல்லா குழுவின் ஆதரவாளர்கள் என்று கருதப்படுகிற 200 மேற்பட்ட தமிழர்கள், புலிகளின் மீளெழுச்சியை பறைசாற்றுவதோடு அடுத்த கட்ட போராட்டத்தற்கான தாயாரிப்பு என்ற வகையில் தம்மை வெளிப்படுத்தி நிற்கின்றனர் என்பதையும் அவ் ஆவணப்படம் சுட்டிக்காட்டியுள்ளது.
2006 இல் ராஜபக்ச அரசு இணைத்தலைமை நாடுகளின் அனுசரணையோடு தீட்டப்பட்ட ‘புரஜக்ற் பீக்கன்’ திட்டம் பிரபாகரன் அவர் தளபதிகள் மற்றும் குடும்பத்தினரை 2009இல் அழித்தொழிக்க, 2023இல் அப்துல்லாவின் வசூல் ‘துவாரகா புரஜக்ற்’ பிரபாகரன், மதிவதனி, துவாரகாவை மீள உயிர்ப்பித்துக்கொண்டு வந்துள்ளது. பிரபாகரன் உயிருடன் தப்பிவிட்டார், குடும்பத்தினர் இன்னும் உயிருடன் இருக்கின்றனர் என்ற கதையளப்புகளுக்கு 2023 முற்பகுதியில் தான் வடிவம் கொடுக்க ஆரம்பித்தனர். ‘தலைவர் ஒரு நாள் இல்லை ஒரு நாள் வருவார்’ என்ற கதையாடல், ‘தலைவர் வரப் போகின்றார்’, ‘தலைவர் வந்துவிட்டார்’, ‘தலைவர் சுவிஸ்க்கு மதிவதனி அக்காவோடும் மகள் துவாரகாவோடும் வந்துவிட்டார்’ என்றானது. அதனை 2023 பெப்ரவரி 14இல் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ரோ இயக்கத்தில் செயற்படும் பழ நெடுமாறன் அணி அறிவித்தது.
“பிரபாகரன் ஐரோப்பாவிற்கு வந்துவிட்டார், அவர் நிதி நெருக்கடியில் இருக்கின்றார், அவர் போராட்டத்திற்கு ஆதரவு கேட்கின்றார்” என்ற கதைகள் அப்போது ஐரோப்பாவில் உலா வந்துகொண்டிருந்தது. இதன் உச்ச கட்டமாக பிரபாகரன் சுவிஸில் சிலரின் வீடுகளுக்கு சென்று விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதாகச் செய்திகள் பரப்பப்பட்டது. அதற்கும் மேலாக முஸ்லீம் பெண்களைப் போன்று பர்தா அணிந்த பெண்ணை சிலர் வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக தன்னை அடையாளப்படுத் முடியாது என மதிவதனி என்ற போர்வையில் வந்தவர் தெரிவித்தாகவும் தேசம்நெற்றுக்கு தெரியவருகிறது.
இந்தச் சந்திப்புகளின் மூலம் வர்த்தகப் புள்ளிகள் £150,000 பவுண்கள் வரை அன்பளிப்புச் செய்ததாகவும் அவர்கள் ஒரு மில்லியன் பவுண் வரை சேர்க்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் தேசம்நெற்க்கு தெரியவந்தது.
இப்பின்னணியில் சற்று பெரிய தொகையை வழங்க விருப்பம் தெரிவித்த லண்டன் வர்த்தகர், துவாரகாவை தான் சந்திக்க வேண்டும் என்று கோரி இருக்கின்றார். அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது. துவாரகாவைத் தெரிந்திராத அந்த வர்த்தகரும் துவாரகாவைச் சந்தித்த போது துவாரகாவை அழைத்து வந்தவரைப் பார்த்து “துவாரகாவிற்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தது யார்?” என்று கேட்க துவாரகாவை அழைத்து வந்தவர் ஒரு தளபதியாகவிருந்த ஆண் போராளியின் பெயரைச் சொல்லியுள்ளார்.
சற்று விசயம் அறிந்த இந்த வர்த்தகர் துவாரகாவைச் சந்திக்க வருவதற்கு முன்னரேயே பேர்மிங்ஹாமில் உள்ள ஒரு மூத்த பெண் போராளியுடன் தொடர்பு கொண்டு தான் எப்படி அவர் துவாரகா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று கேட்டுள்ளார். ஏனெனில் மதிவதனி போல் அவரும் முக்காடு போட்டுக்கொண்டு வருவார் என்றே அவர் எண்ணினார். அவ்வாறே நடந்தது. அப்பெண் போராளி தான் அந்தக் கேள்வியைக் கேட்குமாறு இந்த வர்த்தகருக்கு கூறியிருந்தார். ஏனெனில் இப்பெண் போராளித் தளபதியே துவாரகாவுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுத்தவர். துவாரகா விடயத்தில் அவர்கள் ஏமாற்றியதை உணர்ந்த அந்த வர்த்தகர் வந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.
புலிகளின் தலைவர் வே பிரபாகரனோ அவர்களது குடும்பத்தினரில் ஒருவரோ உயிரோடு தப்பித்து இருந்தால் அதனை உறுதிப்படுத்துவதற்கு WTCC அப்துல்லாவோ, இன்பத்தமிழ் வானொலி பிரபாகரனோ, சேரமான் உரசலோ தேவைப்பட்டிருக்காது. பிரபாகரனோ குடும்பத்தினரோ உயிருடன் தப்பிவிட்டார்களா? எப்படி? என்றெல்லாம் கேள்வியே எழுந்திருக்க வாய்ப்பில்லை. பிரபாகரனும் அவர் குடும்பத்தினரும் உயிருடன் இல்லை என்ற ஒரு உண்மையை மறைத்து, அவர்கள் உயிருடன் இருக்கின்றனர் என்றொரு பொய்யில் ஆரம்பித்தவர்கள், இப்போது ஆயிரக்கணக்கான பொய்களையும் புழுகு மூட்டைகளையும் அவிழ்த்துவிட்டும் அக்குடும்பம் உயிருடன் இல்லை என்ற உண்மையை மறைக்க முடியவில்லை. ஆனால் ஆரம்பத்தில் பலர் பொய்யை நம்பி பல்லாயிரங்களை இந்த மோசடிக் கும்பலுக்கு வழங்கியுள்ளனர்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.