“இந்த நாட்டில் உள்ள முழு அரசியலும் இனவாதத்தினை அடிப்படையாக கொண்டே செயற்படுகின்றது.” – அனுரகுமார திசாநாயக்க

“இந்த நாட்டில் உள்ள முழு அரசியலும் இனவாதத்தினை அடிப்படையாக கொண்டே செயற்படுகின்றது.” என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் பெயரை வைத்தே சஜித் பிரேமதாச கட்சியின் தலைவராகயிருக்கின்றார். அவரது தந்தை ஒரு முன்னாள் ஜனாதிபதியாக இல்லாமலிருந்தால் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினராக கூட வருவதற்கு சஜித் பிரேமதாசவுக்கு தகுதியில்லை இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட மாநாடு நேற்று (27) பிற்பகல் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள வில்லியம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ச. அ. டெஸ்மன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க பங்கேற்றார்.
கல்வி முடிந்தது! ஆசிரிய மாணவர்களின் உரிமையை வென்றெடுப்பது எப்படி எனும் தலைப்பில் இம் மாநாடினை இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மகிந்த ஜயசிங்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நிர்வாகம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் சிறப்புரைகளும் நடைபெற்றன. இங்கு உரையாற்றிய அனுரகுமார திசாநாயக்க,
இந்த நாட்டில் மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்து நிற்கின்றனர். அந்த மாற்றம் எங்கு ஏற்படவேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். இன்று ரணிலுக்கு மாற்றத்திற்காக சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் இன்று ரணிலுக்கான ஆதரவினை இன்னும் மொட்டுக்கட்சி தெரிவிக்கவில்லை. இன்னும் தீர்மானம் எடுக்கவில்லையென மகிந்த ராஜபக்ஸ சொல்கின்றார். பசீல் ராஜபக்ஸவிடம் கேட்டாலும் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லையென்கின்றார்.
தீர்மானம் எடுத்தவர்கள் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் யார் என்று பார்த்தால் மகிந்தானந்த அலுத்கமகே. இவர் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக கூறியிருக்கின்றார். இவர் யார் என்று அனைவருக்கும் தெரியும். ரொகான் ரத்வத்தை ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக கூறுகின்றார். இவர்தான் சிறைச்சாலை அமைச்சராகயிருந்த போது சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளை பிஸ்டோலைக்காட்டி அச்சுறுத்தி மண்டியிடவைத்து அவர்களின் தலைகளில் துப்பாக்கியை வைத்தார். அவர் மாற்றத்திற்காக ரணிலுக்கு ஆதரவு வழங்குகின்றாராம். அதேபோன்று கப்பம் வாங்கி உயர்நீதிமன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரசன்ன ரணதுங்க இன்று ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கின்றார்.
இதேபோன்று மட்டக்களப்பிலும் மாற்றத்திற்காக ரணிலுக்கு ஆதரவு வழங்கப்படும் என பிள்ளையான் அறிவித்துள்ளார்.மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முன்பாக மாற்றமான தலைமைத்துவம் ஒன்று தேவையாகும்.
பல தசாப்தமாக இந்த நாட்டினை ஆட்சி செய்து, பல ஆண்டுகளாக அமைச்சர்களாகயிருந்து பல ஆண்டுகளாக பிரதமராகயிருந்தவர்கள் மாற்றத்தினை எதிர்பார்க்கின்றார்கள். இவர்களது மாற்றம் என்னவாகும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். மக்களின் எதிர்பார்ப்பு ஒரு மாற்றமாகயிருந்தாலும் ரணில் விக்ரமசிங்கவினால் அந்த மாற்றத்தினை கொண்டு வரமுடியாது.
அதேபோன்று சஜித் பிரேமதாசவினாலும் பொதுமக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தினை வழங்கமுடியாது.சஜித் பிரேமதாச முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகனாக இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும்.அவர் ஒரு கட்சியின் தலைவராகவும் ஜனாதிபதி வேட்பாளராகவும் இருப்பதற்கு அவரிடம் உள்ள ஒரேயொரு தகுதி அவரது தந்தை ஜனாதிபதியாக இருந்தது மாத்திரமேயாகும்.
அவரது தகப்பன் ஜனாதிபதியாக இல்லையென்றால் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினராக வரக்கூடிய தகுதியும் அவரிடம் இல்லை. அவரைப்பற்றி சரத்பொன்சேகாவே பேசுகின்றார். அவர் ஆட்சிக்காலத்தில் சரத்பொன்சேகாவினை மேடையில் வைத்துக்கொண்டு திருடர்களை பிடிக்கப்போவதாக கூறினார்.ஆனால் அவர் ஆட்சிக்காலத்தில் சஜித் பிரேமதாசவையே கசினோ விடயத்தில் பிடித்திருந்தார்.
மாற்றம் ஒன்று வேண்டுமென்றால் அந்த மாற்றத்தினை செய்யக்கூடியவர்கள் யார் என்றால் தேசிய மக்கள் சக்தியினர் மட்டுமேயாகும். இந்த நாட்டு மக்கள் மீண்டும் அந்த மிகமோசமான பாதையில் செல்லமாட்டர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.
இன்று ஆசிரியர்கள் தமக்காக வரவு செலவு திட்டத்தில் கொண்டுவரப்பட்ட சம்பள அதிகரிப்பையே கோருகின்றனர். ரணில் விக்ரசிங்கவுக்கு 865 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. இந்த ஒதுக்கீடானது வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படாத ஒதுக்கீடாகும்.வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை ஆசிரியர்களுக்கு வழங்கமுடியாது என கூறிவிட்டு தனக்கு தேவையான நிதியை பெற்றுக் கொள்ளுகின்றார் ரணில் விக்ரமசிங்க.
ஆசிரியர்கள் சாதாரண ஒரு போராட்டத்தினையே முன்னெடுத்தனர்.தமக்கான கொடுப்பனவுக்காகவே அவர்கள் போராட்டம் செய்தார்கள். ஆனால் ரணில் அவர்கள் கண்ணீர்ப்புகை, தடியடி, குண்டாந்தடி பிரயோகம் செய்து அவர்களது போராட்டத்திற்கு பதிலளித்தார்.அவருக்கு அந்த பலம் இருந்ததனால் ஆசிரியுர்கள் மீது இந்த தாக்குதலை முன்னெடுத்தார். அவர் ஒன்றை நினைவில்கொள்ளவேண்டும் இன்னும் மூன்று மாதத்தில் ரணிலிடம் உள்ள அதிகாரம் மக்களிடம் வரும்.
இந்த நாட்டில் இனவாதம் மிகப்பெரும் பிரச்சினையாக மாறியிருக்கின்றது. இந்த நாட்டில் உள்ள முழு அரசியலும் இனவாதத்தினை அடிப்படையாக கொண்டே செயற்படுகின்றது. வடக்கில் ஒரு அரசியல் தெற்கில் ஒரு அரசியல் கிழக்கில் ஒரு அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நாட்டினை ஐக்கிய படுத்துவதற்கான அரசியல் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நாட்டில் கோத்தபாயவின் வெற்றியானது முஸ்லிம் மக்களுக்கு எதிரான அரசியலிலேயே கிடைத்தது.
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை வேறுபடுத்துகின்ற அரசியலுக்கு பதிலாக அனைவரையும் ஒற்றுமைப்படுத்துகின்ற அரசியலே செய்யவேண்டியுள்ளது. அந்த மாற்றத்தினையே தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்கும்.இந்நாட்டில் இனவாத ரீதியான அரசியலை நாங்கள் முறியடிப்போம்.
இந்த நாட்டிற்கு புதிய அரசியல் ஒன்று தேவையாகும்.மக்கள் பணத்தை சூறையாடுவது முற்றாக நிறுத்தப்படும்,மக்கள் பணத்தை வீணடிக்காத அரசியல் முன்னெடுக்கப்படும், நீதித்துறைக்கு அடிபணியும் அரசியல் அந்த மாற்றத்தினையே நாங்கள் கொண்டுவருவோம் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஒன்று உருவானால். தற்போதுள்ள அரசியலானது குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியலாகவே உள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் கேகாலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மகிந்தானந்த அலுத்கமகே ரணிலை சிறையில் அடைப்போம் என்று கூறினார். ஆனால் நேற்று கூறுகின்றார் ரணில் விக்ரசிங்கவுக்கு ஆதரவு வழங்குவோம் என்று.எவ்வாறு இவர்களால் மட்டும் முடிகின்றது. ரணில் மத்திய வங்கினை கொள்ளையிட்டுள்ளார் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று மாற்றத்திற்காக ரணிலுக்கு வாக்களிக்குமாறு கோருகின்றனர்.
இந்த நாட்டில் மக்கள் அமைதியான முறையில் தாங்கள் விரும்பும் ஒருவரை ஆதரிக்கும் உரிமையிருக்கின்றது. இன்று மட்டக்களப்பில் அச்சுறுத்தும் ஒரு அரசியலே இருக்கின்றது. ஆசிரியர்கள் கதைப்பதற்கு பயம், அரச உத்தியோகத்தர்களுக்கு பயம். தாங்கள் விரும்பிய ஒரு அரசியலை செய்வதற்கு நாட்டு மக்களுக்கு உரிமையிருக்கின்றது. பிள்ளையானுக்கு அச்சப்படும் நிலைமையே இருக்கின்றது.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் இருக்கும் அனைத்து ஆயுதங்களும் களையப்படும்.ஒரு கூட்டம் நீதிக்கு சட்டத்திற்கு முரணாக அரசியல்செய்வதை அனுமதிக்கமுடியாது. அரசாங்கத்தின் ஆதரவுடன் அவ்வாறு செயற்படுவதற்கு இடமளிக்கமுடியாது.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான குழுக்களை முழுமையாக கட்டுப்படுத்துவோம். அதுஅவசியமான ஒன்றாகும். அவ்வாறு இல்லாவிட்டால் மக்கள் உரிமையினை பாதுகாக்க முடியாது.
கடந்த காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்றது. அது தொடர்பில் ஆராய்ந்துசென்றால் இந்த ஒட்டுக்குழுக்கள் பற்றிய விடயங்கள் வெளியேவந்தது. சட்டரீதியாகவுள்ள இராணுவம் மட்டுமே ஆயுதங்களை வைத்திருக்க முடியும். வேறு யாரும் ஆயுதங்களை வைத்திருக்கமுடியாது. அவை களையப்படவேண்டும் என தெரிவித்தார்
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *