புலிகளின் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பு வலயத்திலேயே மறைந்திருக்கின்றார். இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தை நெருங்கிச் செல்லும்போது அவர் கடல் மார்க்கமாக தப்பிச்செல்ல முயற்சிக்கலாம் என இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார்.
பிபிசியின் சிங்கள செய்தி சேவையான சந்தேசயவுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இச்செவ்வியில் இராணுவத் தளபதி மேலும் கூறியதாவது, புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே மறைந்து இருப்பதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதுவும் 8கிலோ மீற்றர் நீளமும் 1.5கிலோ மீற்றர் அகலமும் கொண்ட கடற்பகுதியிலேயே மறைந்துள்ளனர்.
பயங்கரவாதிகள் மனித கேடயமாக வைத்திருந்த பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களை விடுவிக்கும் பொறுப்பு எம்மிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பொறுப்பை நிறைவேற்றும் அதேவேளை பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகிறோம்.
இன்னும் சுமார் 15ஆயிரம் மக்கள் அங்கு சிக்கியிருக்கலாம் என நினைக்கிறேன்.சுமார் 300, 400 புலிகளே அங்கு இருக்கின்றனர். பலவந்தமாக ஆயுதம் கொடுக்கப்பட்ட பொதுமக்களும் அதில் இருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.